வாழைச்சேனையில் சட்டவிரோதமாக நடாத்தப்பட்ட தச்சு தொழிற்சாலை

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு வாழைச்சேனை வட்டார வன அதிகார பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனையில் நீண்ட காலமாக காடு பேணல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் தச்சு தொழிற்சாலையை இயக்கி வந்தார் என்ற குற்றச்சாட்டிலும் மற்றும் அனுமதிப் பத்திரமின்றி காட்டு மரத்தில் செய்யப்பட்ட பொருட்களை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலும் சந்தேக நபர் ஒருவரை தாம் கைது செய்து வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக வாழைச்சேனை வட்டார வன அதிகாரி சு.தணிகாசலம் தெரிவித்தார்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த பிரதேசத்திற்கு தமது உத்தியோகஸ்த்தர்கள் சகிதம் சென்று பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது மேற்படி நபர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் முதிரை, தேக்கு, வேங்கை போன்ற காட்டு மரங்களில் செய்யப்பட்டவையாகும் என்றும் அவற்றிற்கு சொத்துக் குறி இன்றி காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இவற்றின் பெறுமதி சுமார் 3இலட்சமாகும். கைப்பற்றப்பட்ட பொருட்களையும் குறித்த சந்தேக நபரையும் இன்று புதன் கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி எம்.எச்.எம்.பஸில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அரச உடமையாக்குவதுடன் 15 ஆயிரம் ருபா தண்டப்பணமும் அறவிடுமாறு கட்டளை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை மேற்குறித்த வனப் பிரிவிலுள்ள பதுறியா நகர் மிராவோடையில் அனுமதிப் பத்திரம் மற்றும் சொத்துக் குறி இல்லாமல் முதிரை மரத்தில் செய்யப்பட்ட கதவுகள், ஜன்னல்கள் போன்ற பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் செல்லும் வழியில் அவற்றினை கைப்பற்றியதாக தெரிவித்தார்.

அவற்றினை நேற்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக தெரிவித்தார்.

இதன்போது பொருட்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டதுடன் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் தொப்பிகல வடமுனை காட்டு பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பெறுமதி வாய்ந்த காட்டு மரங்களை தாம் கைப்பற்றி நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.