நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான ஆலோசனை

Report Print Sujitha Sri in சமூகம்

யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உட்பட கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் பிணையில் விடுவிப்பது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ். பல்கலைக்கழகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மூவரினதும் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

மேற்படி கோரிக்கையை பரிசீலித்த சட்டமா அதிபர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர்களை பிணையில் விடுவிக்கும் ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது சட்டமா அதிபரின் இந்த ஆலோசனை மன்றில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் முன்னாள் போராளிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.