பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த நபர் கைது

Report Print Theesan in சமூகம்

மன்னார் - பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த நபரொருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரியபண்டிவிருச்சான் பகுதியில் குடும்பமொன்றில் தந்தைக்கும், மகனுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை சற்று நேரத்தின் பின் புதிய கைக்குண்டு ஒன்றினை மறைத்து வீட்டிற்கு எடுத்து வந்து அதனை வெடிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா ஜெயகாந்தன் திடீரென்று அங்கு பிரசன்னமாகி குறித்த நபருடன் லாவகமாக பேசி தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சம்பவம் தொடர்பில் உடனடியாக மடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பாலம்பிட்டி 317ஆவது படையினர் கைக்குண்டை எடுத்து வந்த 55 வயதுடைய பெரியபண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து குறித்த கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் பெரியபண்டிவிரிசான் பகுதியில் சிறது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் படையினர் இணைந்து அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்க செய்வதற்கு வவுனியாவிலுள்ள குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.