ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை கொண்டிருந்த வத்தளை மாபோல பிரதேசத்தை சேர்ந்த செல்வந்த வர்த்தகரை மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இந்த நபர், மாபோலையில் இருக்கும் மூன்று மாடி ஆடம்பர வீடு மற்றும் அருகில் இருக்கும் மற்றுமொரு ஆடம்பர வீட்டின் உரிமையாளர். இந்த நபரின் இரண்டு மனைவிகள் மற்றும் பிள்ளைகள் இந்த வீடுகளில் வசித்து வருவதுடன் வீடுகளின் மேல் மாடிகளில் நீச்சல் தடாகங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இதுவரை அடையாளம் காணப்படாத ரகத்தை சேர்ந்த கைத்துப்பாக்கி அதற்கான தோட்டாக்களையும் சந்தேக நபரிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த நபரிடம் இரண்டு கடவுச்சீட்டுக்கள் இருந்துள்ளன.
இவற்றை பயன்படுத்தி சந்தேக நபர் பல நாடுகளுக்கு சென்றுள்ளார். அவர் சென்ற நாடுகளில் துபாய் நாடும் அடங்கும்.
தென் மாகாணத்தை சேர்ந்த பிரபல பாதாள உலக தலைவரான மாகந்துரே மதுஷ் மற்றும் கஞ்சிபான இம்ரான் ஆகியோருடன் சந்தேக நபர் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மதுஷ் மற்றும் கஞ்சிபான இம்ரான் ஆகியோர் துபாயில் வசித்த போது அங்கு சென்றுள்ள இந்த சந்தேக நபர் இவர்களின் வீடுகளில் தங்கியிருந்துள்ளார்.
எந்த நோக்கத்தில் இந்த செல்வந்த வர்த்தகர், மேற்படி சந்தேக நபர்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார் என்பதை கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2009 ஆம் ஆண்டுகளில் வத்தளை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியை ஓட்டி வாழ்க்கை நடத்தி வந்துள்ள இந்த நபர், கப்பலில் பொருட்களை கொண்டு செல்லும் நிறுவனத்தின் உரிமையாளர் எனவும், ஆனமடுவ பிரதேசத்தில் கொள்கலன் நிலையம் ஒன்றையும் நடத்திய வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டி சாரதியாக வாழ்க்கையை ஆரம்பித்த இந்த நபர் குறுகிய காலத்தில் எப்படி செல்வந்த வர்த்தகராக மாறினார் என்பதை அறிய பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப்பின் நெறிப்படுத்தலின் கீழ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.