முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் கையளிப்பு

Report Print Ashik in சமூகம்

2009 இறுதி யுத்தத்தின் போது மரணித்த தமிழ் மக்களின் 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அணுசரணையுடன் உயிரிழந்த அனைத்து மக்களின் நினைவாக ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் அவர்களுக்காக ஒரு மரத்தினை நாட்டி அவர்களுக்கான நினைவேந்தல்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வின் போது இறந்தவர்களின் சார்பாக நடுவதற்கான மரங்களையும் மக்களுக்கு குறித்த நிறுவனத்தில் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இறந்த எம் மக்களுக்கான அடையாளங்களை உருவாக்குவோம் அவர்களின் நினைவேந்தல்கள் எப்போதும் சமூகத்தில் பிரதிபலிக்க கூடிய ஆக்கப்பூர்வமான நினைவேந்தல்களாக இருக்க வேண்டும்.

இப் பத்தாவது நினைவேந்தலையிட்டு கோயில்கள், வீதிகள், பொது இடங்கள், ஆகியவற்றில் மரங்களை நாட்டுதல், அவர்கள் அனுபவித்த துயரங்களை நினைவுறுத்தும் வகையில் உப்பில்லா கஞ்சி சமைத்து பருகுதல் என்பவற்றின் ஊடாக எமது துன்பத்தை பகிர்ந்து கொள்வோம்.

இந்த நாட்களில் மரணித்த எம் அன்புக்குரியவர்களின் பெயரால் அவர்களை மனதில் நிறுத்தி நற்காரியங்களில் ஈடுபட்டு இயற்கையையும் மனிதத்தையும் பாதுகாத்து பரஸ்பர நல்லிணக்கத்தையும் புரிதலையும் எம்மிடையே உருவாக்கும் கலாசாரத்தினை கட்டியெழுப்புவதனூடாக அவர்களுக்கு எமது நிலையான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளை செலுத்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.