இலங்கையில் தங்கியிருக்கும் 1670 வெளிநாட்டு அகதிகள்

Report Print Steephen Steephen in சமூகம்

அகதி மற்றும் அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ள ஆயிரத்து 670 வெளிநாட்டவர்கள் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கை செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 31 ஆம் திகதி வரை 851 பேர் அகதி அந்தஸ்து கோரியும் 819 பேர் அரசியல் தஞ்சம் கோரியும் இலங்கை வந்துள்ளனர்.

இந்த வெளிநாட்டு அகதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். 608 பாகிஸ்தான் நாட்டவர்கள் இலங்கையில் அகதிகளாக தங்கியுள்ளனர். இவர்களை தவிர ஆப்கானிஸ்தானை சேர்ந்த 146 பேரும், மியன்மாரை சேர்ந்த 34 பேரும், ஈரானை சேர்ந்த 22 பேரும், சிரியாவை சேர்ந்த 14 பேரும், யேமனை சேர்ந்த 13 பேரும், பாலஸ்தீனை சேர்ந்த 9 பேரும், எரித்திரியாவை சேர்ந்த 2 பேரும், சோமாலியா, மாலைதீவு, டுனிசியா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவரும் இலங்கையில் அகதிகளாக தங்கியுள்ளனர்.

அரசியல் தஞ்சம் கோரி வந்துள்ள 819 வெளிநாட்டவர்களில் 733 பேர் பாகிஸ்தானியர். 55 ஆப்கானிஸ்தானியர், 8 நைஜீரியர், 8 ஈரானியர், 4 சூடானியர், 3 மாலைதீவு நாட்டவர்கள், 3 யேமனியர், 2 பங்களாதேஷியர், பாலஸ்தீனம், சிரியா, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் அரசியல் தஞ்சம் கோரி இலங்கையில் தங்கியுள்ளனர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை அரசுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கத்தின் அடிப்படையில் இவர்கள் இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.