படையினருக்கு முன்னால் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது: சீ.வி.கே

Report Print Sumi in சமூகம்

இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் இருந்த போது, பள்ளிவாசல் தாக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கொண்டு வரப்பட்டதே தவிர, அந்த சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொண்டு சிலர் செயற்படுவதற்காக கொண்டு வரப்படவில்லை.

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது, அரச படையினர் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் எனின், அவசர கால சட்டத்தின் தேவையே இல்லாமல் போய்விடுகின்றது. இது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல. கண்டிக்கப்பட வேண்டியவை.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இந்த நாட்டின் இராணுவத்தினர். இரு இனம் சார்ந்தவர்கள் அல்ல. குற்றவாளிகளை தேடிப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களின் கடமை.

அதில் எந்த தடையும் ஆட்சேபனையும் இருக்க முடியாது. படையினருக்கு முன்பாகவே, ஒரு பள்ளிவாசல் உடைக்கப்படுகின்றதென்றால், அதிலும் எந்த சட்டம் ஒழுங்கு அமைதி நிலை நிறுத்துவதற்காக அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ? அந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ், அவர்களின் முன்பாக ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில், நடைபெற்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.