ஏனைய மதத்தவர்கள் மீது நம்பிக்கை வைத்து பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுதல் வேண்டும்: ஏன்.ஏ.ஏ.புஸ்பகுமார

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

பௌத்தம், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஏனையவர்களின் மீது நம்பிக்கை வைத்து பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலமே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஏன்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்ற நல்லிணக்கக் குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் மாவட்டத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முப்படையினரும் பொலிஸாரும் சிறப்பான பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றங்கள், மத்திய, மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்கள் இதில் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. கடந்த காலங்களைப் போன்றே எதிர் வரும் காலங்களிலும் மாவட்டத்தின் அமைதியைப் பேறுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.

கிராம மட்ட, சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் செயற்பாடுகள் பிரச்சினையான காலங்களில் மாத்திரம் என்றில்லாமல் தொடர்ச்சியாகவும் நடைமுறையில் இருத்தல் அவசியமாகும். மாவட்டத்தில் அனைத்து மதங்களுக்கும் கௌரவம் வழங்கும் வகையில் நல்லிணக்கம் சார் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஏனையவர்களின் மீது நம்பிக்கை வைத்து பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவதன் மூலமே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடியும். சகோதரத்துவத்துடன் வாழ்வதே மாவட்டத்தின் முன்னேற்றத்திற்குச் சிறந்ததாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இக் கூட்டத்தில் மாவட்ட நல்லிணக்கக் குழுவை வலுப்படுத்தி மாவட்டத்தினதும், நாட்டினதும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய ஒருமைப்பாட்டு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாட்டு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் மாவட்ட நல்லிணக்கக் குழுவை வலுப்படுத்துதல் என்ற அடிப்படையில் இக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட உதவிச் செயலாளர் என்.பிரதீபனின், பிரதேச செயலாளர்கள், மதத் தலைவர்களான திருகோணமலை ரங்கிரி உல்பத்த ரஜமகா விகாரையின் விகாராதிபதி அருள்கல சிறி சீலவிசுட்தி தேரர், இராணுவ, விமான, கடற்படை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.