பழைய பகைமையை வைத்துக் கொண்டு பழி தீர்க்காதீர்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்நாட்டில் முறையற்ற பிரதம தெரிவிற்கு ஆதரவு வழங்காமையினால் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுத்தீனை பழைய பகைமையை வைத்துக் கொண்டு பழி தீர்க்க முன்னெடுக்கப்படும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையினை வன்மையாக கண்டிக்கின்றோம் என குச்சவெளி பிரதேச தவிசாளர் ஏ.முபாரக் தெரிவித்துள்ளார்.

குச்சவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட சந்திப்பொன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒரு சில தீவிரவாதிகளின் செயற்பாட்டினால் தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்புனித மிகு றமழான் மாதத்தில் எத்தனையோ பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டது.

எத்தனையோ முஸ்லிம்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட நிலையிலும் எமது நாட்டிலே வாழும் முஸ்லிம்கள் கடும் அவலநிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் முஸ்லிம்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் அமைச்சர் றிசாட் பதியுத்தீனுக்கு எதிராக இன்றைய தினம் கௌரவ சபாநாயகர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

நாட்டின் ஜனாதிபதியினையும், பிரதமரையும், அரசாங்கத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் இருந்து வருகின்றனர். எமது ஆதரவினூடாகவே, எதிர்பாராதவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனை மறந்து செயற்படுவது எதிர்காலத்தின் சிறுபான்மை மக்களாகிய எங்களிடம் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க கோரும்போது இதனை ஞாபகப்படுத்த நேரிடும் என்பதை சுட்டிகாட்டுவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.