இலங்கை தொடர் குண்டு வெடிப்பு குறித்த பேசியவர் மீது பாயவிருந்த தேசியப் பாதுகாப்புச் சட்டம்! முன் பிணையால் தப்பினார்

Report Print Murali Murali in சமூகம்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டு பேசிய, இயக்குநரும், தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவருமான சோழன் மு.களஞ்சியம் முன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற தொடர்தற்கொலை குண்டு தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய, இயக்குநர் சோழன் மு.களஞ்சியம், இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக் குறித்து விரிவாக பேசினார். இதன்போது இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட அரசியல் கட்சியை விமர்சித்து கடுமையாக பேசியுள்ளார்.

இதனால் அவருக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றமத்தில் முன் பிணை கோரி, சோழன் மு.களஞ்சியம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சோழன் மு.களஞ்சியத்திற்கு நிபந்தனையுடன் கூடிய முன் பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.