மஸ்கெலியாவில் இடம்பெறவிருந்த போராட்டத்திற்கு பொலிஸார் தடை

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா - கவரவில தமிழ் வித்தியாலயத்தில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்களை தாக்கி விட்டு தலைமறைவாகியிருக்கும் குழு ஒன்றை கைது செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு மஸ்கெலியா பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் கவரவில தமிழ் வித்தியாலயத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட கூடாது என்ற நிபந்தனைக்கு அமைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருந்த மக்களை ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ள வேண்டாமென மஸ்கெலியா பொலிஸாரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையை சுற்றி பாதுகாப்பு வேலியமைக்க பாடசாலை நிர்வாகமும் பொற்றோர்களும் தீர்மானம் எடுத்து பாடசலையை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொற்றோர்களில் ஒரு குழுவினர் பாதுகாப்பு வேலி அமைக்ககூடாதென அறிவித்துள்ளனர்.

எனினும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு வேலியை நிர்வாகம் அமைக்க நடவடிக்கை எடுத்திருந்தது, இந் நிலையில் நேற்று பாடசாலை கடமை முடிந்து பேருந்து தரிப்பிடத்திற்கு வருகைத்தந்து கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத கும்பலொன்று ஆசிரியர்களை தாக்கியுள்ளதாக காயமுற்ற ஆசிரியர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தாக்குதலுக்கு உள்ளான இரண்டு ஆசிரியர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதோடு, ஆர்ப்பாட்டத்தினை கைவிட்ட பொதுமக்கள் பாடசாலைக்கான பாதுகாப்பு வேலியினை அமைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers