வரலாற்றில் இடம்பிடித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் இறுதி கட்ட போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பேரவலம் அரங்கேறியிருந்தது.

இந்த கொடூரம் நடந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இம்முறை நடத்தப்பட்ட நினைவேந்தலானது முள்ளிவாய்க்கால் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

சுமார் மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசிற்கு இடையில் நீடித்து வந்த உள்நாட்டு போரானது பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இன்று போன்றதொரு நாளில் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

போர் ஆரம்பித்ததில் இருந்து பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் போர் இடம்பெற்ற போது அப்பாவி தமிழ் மக்கள் பலரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன.

இதன் பின்னர், ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் வைத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன்போது தமது உறவுகளை இழந்தவர்கள் இதில் பங்கேற்று ஆறா வடுவாய் தமது இதயத்திலுள்ள துயரத்தை கண்ணீரால் கரைக்க முயற்சி செய்வது வழமை.

இவ்வாறு கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முறையான ஒழுங்குப்படுத்தல்களுடனும், சிறப்பாகவும் நடைபெற்று தான் வந்திருந்தன.

எனினும் அந்த நிகழ்வுகளில் அரசியல் ரீதியான தாக்கம் என்பது எங்காவது ஒரு மூலையில் இருந்து வந்ததும், அதனால் சிறு உரசல்கள் மற்றும் பிரச்சினைகள் நடந்ததும், இந்த சந்தர்ப்பத்தில் ஆறா துயரை ஆற்ற வந்த மக்கள் மத்தியில் சில தாக்கங்கள் ஏற்பட்டுள்ளமையும் மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆனால் இம்முறை அரசியல் கட்சிகள், அமைப்புகள், மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஓரணியில் நின்று அரசியல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல் நினைவேந்தலை நடத்தி, முள்ளிவாய்க்கால் வரலாற்றில் இதுவரை இப்படியொரு நினைவேந்தல் இடம்பெறாத அளவிற்கு சிறப்பாக செய்து முடித்துள்ளார்கள்.

அதைவிட முக்கியம் என்னவெனில் ஆண்டாண்டு காலமாக தம் மனதில் பாரமாய் உள்ள துயரங்களை கண்ணீர் விட்டழுது மனதை சாந்தப்படுத்தி கொள்ள எம் உறவுகளுக்கு இடமேற்படுத்தி கொடுத்து அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்துள்ளார்கள்.

இதேவேளை இம்முறை குறிப்பிட்டு காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மக்களோடு மக்களாக நின்று நாம் இழந்த எம் உறவுகளுக்கான தூய்மையான அஞ்சலியை செலுத்தியிருந்தார்கள்.

இப்படியான நிகழ்வுகள், அதிலும் தமிழர்களின் உணர்ச்சிகளோடு பின்னிப்பிணைந்த இவ்வாறான அனுஷ்டிப்புக்கள் தனிப்பட்ட நபர்களுக்கு சுய லாபம் தேட அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொண்டு செயற்படுவது அவசியமாகும்.

இவ்வாறான நாட்கள் ஆறா துயரோடு நடைபிணமாய் வாழும் எமது மக்களுக்கான நாட்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

என்றபோதும் இம்முறை நிகழ்வை புலம்பெயர்ந்து வாழும் சிலர் தாமே ஏற்பாடு செய்ததாக தெரிவித்து சுயலாபம் தேட முயற்சித்துள்ளமையாது சிறிது வேதனையளிக்கும் விடயமாக உள்ளது.

எனினும் நினைவேந்தலை ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு - கிழக்கு) என்ற அமைப்பினர் கூறுகையில், இம்முறை நிகழ்வை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அனைவரும் இணைந்தே ஏற்பாடு செய்திருந்தோம்.

அரசியல் கட்சிகளோ அல்லது தனிப்பட்ட அமைப்புகளோ உரிமை கோரும் வகையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எல்லாரும் எம்மோடு கைகோர்த்திருந்தார்கள் என தெரிவித்துள்ளனர்.

எனவே இதனை ஒரு பாடமாக கொண்டு இனிவரும் காலங்களில் தமிழர்களுடைய வரலாற்று நிகழ்வாக இருக்க கூடிய எந்தவொரு நிகழ்விலும், மக்களின் உணர்வுக்கு முன்னுரிமை கொடுத்து, சாதனை படைத்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போல் நடத்த முன்வர வேண்டும்.

அதேபோல் தமிழர்களின் உணர்வுகளிலும், அவர்களின் காயங்களிலும் யாரும் சுயலாபம் தேட முயற்சிக்க கூடாது என்பதுடன், அவ்வாறு யாரையும் முயற்சிக்க விடாது ஓரணியில் நிற்க வேண்டியதும் எமது கடமையாகும்.

இனிவரும் காலங்களில் அரசியல், கட்சி, ஜாதி, பேதம் கடந்து மக்கள் வழியில் உயர்ந்து நின்று தமிழர்களின் ஒற்றுமையை பலமாக பறைசாற்றுவது எம் அனைவரினதும் தார்மீக கடமையாகும்.

Latest Offers