வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டமை பற்றி எதுவும் தெரியாது: வவு.மேலதிக அரசாங்க அதிபர்

Report Print Thileepan Thileepan in சமூகம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 35 வெளிநாட்டு அகதிகள் வவுனியாவிற்கு கொண்டு வந்து தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நீர்கொழும்பில் தங்கியிருந்த நிலையில் முதல் கட்டமாக 35 பேர் நேற்று இரவு வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டனர். இதனை உறுதிப்படுத்தும் முகமாக மாவட்ட செயலகத்தில் விபரம் கோரிய போதே மேலதிக அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியாவிற்கு வெளிநாட்டு அகதிகளை கொண்டு வரவுள்ளதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் கொண்டு வந்து தங்க வைக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

எமது உத்தியோகத்தர்களும் அங்கு கடமையில் இல்லை. இது தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிடமே கேட்க வேண்டும். அல்லது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் தான் கேட்க வேண்டும். எமக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த அகதிகளை கொண்டு வருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்து மாவட்ட அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றில்' ஈடுபட்டமையும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.