ரிஷாட் பதியுதீனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பவன் நானாகவே இருப்பேன்

Report Print Thirumal Thirumal in சமூகம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் முதலில் குரல் கொடுப்பவன் நானாகவே இருப்பேன் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதைவிடுத்து அரசியல் இலாபத்திற்காக அவர் மீது குற்றம் சாட்டுவதையும், அவருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கும் மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் - வெளிஓயா மேற்பிரிவு தோட்டத்தில் சுதந்திரபுரம் வீடமைப்பு திட்டத்தில் 30 குடும்பங்களுக்கு காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஆனது அமைச்சர் மீது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையாகும்.

அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றவர்களின் சதி திட்டமாகவே இதனை மலையக மக்கள் முன்னணி பார்க்கின்றது.

சிறுபான்மை கட்சிகளும், சிறுபான்மை மக்களும் இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை குழு அமைக்கப்பட்டு அவர் மீது குற்றம் இணங்காணப்படும் பட்சத்தில் அதற்கு அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்க தயாராக இருக்கின்றேன்.

அதைவிட்டு வெறுமனே வதந்திகள் மூலமாகவும் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் தனது ஆதாயத்தை தேடிக்கொள்ளும் நோக்கத்துடனும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

குற்றம் சுமத்தப்படுகின்ற முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரின் மீதும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மையிலேயே அவர்கள் குற்றம் செய்து இருப்பார்களே ஆனால் அதற்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்க நான் தயாராக இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.