மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

Report Print Kumar in சமூகம்

தமிழ் மக்களின் துயர நினைவுகள் எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியருகே நடைபெற்றுள்ளது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த குரு முதல்வர்,

முள்ளிவாய்க்கால் நிகழ்வானது கிள்ளியெறியப்பட வேண்டிய நிகழ்வு அல்ல. முள்ளிவாய்க்காலில் பாய்ந்த இரத்தம் தமிழர் நெஞ்சங்களில் பாய்ந்து கொண்டிருக்கின்றது.

சரித்திரங்கள் சாகக்கூடாது, சரித்திரங்கள் மறைந்து போகக்கூடாது. தமிழர்களின் இந்த துயர நினைவுகள் எதிர்கால சந்ததியினருக்கு ஊட்டப்பட்டு அவர்களும் எமது உரிமைக்காக நீதியான நேர்மையான முறையில் செயற்பட அவர்கள் முன்வரவேண்டும்.

என்றாவது ஒருநாள் எமது மக்களின் அவலக்குரலுக்கு விடைகிடைக்க வேண்டும். அதற்கான பயணத்தினை தொடர்ந்து நாங்கள் முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.