இலங்கையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களிலெல்லாம் பரீட்சை பெறுபேறுகள் பின்னடைவு!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

இலங்கை பொதுப் பரீட்சை பெறுபேற்றின்படி எங்கெங்கெல்லாம் தமிழர் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் பெறுபேறுகள் பின்னடைவாகத்தான் இருக்கின்றது என பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

பட்டிருப்பு கல்வி வலயத்தின் க.பொ.த.சா.த பரீட்சை பெறுபேற்றினை அதிகரிக்க செய்வதற்காக வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயற்றிட்டத்திற்கு அமைய அதன்ஆரம்ப நிகழ்வு பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு எட்டாம் இடத்தில் இருந்தால் கிழக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கும். கிழக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்தால் வடக்கு எட்டாம் இடத்தில் இருக்கும். இதுதான் எமது கல்வியின் நிலையாக இருக்கின்றது.

ஆனால் தமிழர்களின் கல்வி நிலை முன்னர் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தது. ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. தற்காலத்தில் தமிழர்களின் நிலை அடிமட்ட தொழிலொன்றினை பெற்றுக் கொள்வதே நோக்கமாக உள்ளது.

அவ்வாறான நிலையில் இருந்து நாங்கள் விடுபட வேண்டும். அதற்காக நாங்கள் கல்வியினை முன்னேற்ற வேண்டும். இதற்காக பெறுபேற்றினை நாங்கள் அதிகரிக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.

கல்வி என்பது ஒரு நீண்ட கருமத்தொடராகும். தனியொருவர் மாத்திரம் அதனை முன்னெடுத்துச் செல்லமுடியாது. எனவே கல்விச் சமூகம் சார்ந்த அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே சிறந்ததொரு அடைவு மட்டத்தினை நாங்கள் அடைய முடியும்.

அந்த வகையில் இப்பாடசாலையானது கூடுதலான மாணவர்கள் கற்கின்ற சில பாடசாலைகளில் அடைவு மட்டமானது சற்று குறைந்து செல்வதனை நாங்கள் அவதானித்துள்ளோம்.

அந்த வகையில் இவ்வடைவு மட்டமானது குறைந்து செல்வதற்கான காரணத்தினை ஆராயும் பொருட்டே தற்போது அதற்கென ஒரு புதிய திட்டத்தினை தயாரித்து அதன்படி இந்த பேறுபேற்றினை கூட்டுதற்கான விசேட கலந்துரையாடலை நாங்கள் பாடசாலை ரீதியாக நடாத்தி வருகின்றோம்.

அதற்கமைவாகவே இந்த பாடசாலையில் உத்தியோக பூர்வமாக அதனை ஆரம்பித்துள்ளோம். இந்த கலந்துரையாடல் என்பது கடந்த கால குறைபாடுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடலாக இருக்காது.

மாறாக எதிர்வரும் காலங்களில் பெறுபேற்றினை எவ்வாறு அதிகரிக்க செய்ய முடியும். அவ்வாறு அதிகரிக்க செய்ய நடைமுறைப்படுத்த வேண்டிய தந்திரோபாய நடவடிக்கைகள் என்ன? என்பது சம்பந்தமாக ஆராய்வதற்கு மாத்திரமே இங்கு நாங்கள் கூடியிருக்கின்றோம். என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

க.பொ.த சாதாரண தரத்திற்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பிரதான பாடத்திற்கு கொடுக்கின்ற முன்னுரிமையளித்து கூடைப்பாடத்திற்கு கொடுப்பதில்லை . அவ்வாறான கற்பித்தலை நீங்கள் மேற்கொள்ள கூடாது.

மாறாக எதிர்காலத்தில் ஆசிரியராகிய நீங்கள் கூடைப்பாடத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் இதனூடாக சித்திவீதத்தினை அதிகரிக்க முடியும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெற்றோர்கள் இந்த விடயத்தில் கூடதலான கவனம் செலத்த வேண்டும் உங்களது பிள்ளைகளை சமூகத்தில் எவ்வாறு தலைமைத்துவ பண்பு கொண்டவர்களாக அதிகரிக்க வேண்டும் என்பதனை நிங்கள் சிந்திக்க வேண்டாம்.

அசிரியராக இருந்தாலும் சரி பெற்றோர்களாக இருந்தாலும் சரி, மாணவர்களாக இருந்தாலும் சரி சில தியாகங்களையும் விட்டுக்கொடுப்புக்களையும் செய்தே வெற்றிகளை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் வலய கல்வி முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விபணிப்பாளர் எஸ்.கஜேந்திரன் கோட்டக்கல்வி பணிப்பாளர் க.அருள்ராசா, அதிபர் ஆ.புட்கரன், பிரதி அதிபர் க.கமலநாதன், மாணவர்கள். பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers