பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக நாட்டில் மோசமடைந்துள்ள பாதுகாப்பு நிலமைகள்

Report Print Rusath in சமூகம்

நாட்டில் ஏற்பட்ட சில பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக பாதுகாப்பு நிலமைகள் இன்னும் மோசமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பிருமான இரா.சம்பந்தன் தெரவித்துள்ளார்.

இந்த நிலைமையிலிருந்து நாடு மீளவேண்டும் என்பதுடன், மீளப்பெற செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நலன்புரி சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களை பெறுத்தவரையில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு வன்முறைகளுக்கு, உள்ளாகி வந்திருக்கின்றார்கள். தமிழர்களுடைய உரிமைப்போராட்டம் சம்பந்தமாக, ஒரு அரசியல் தீர்வு பெறுவதற்கு பல முயற்சிகள் எடுக்கபப்பட்டு, பல முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும்கூட அது இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லை.

அது சம்பந்தமாக விரைவில் ஒரு முடிவு வர வேண்டும். அதற்கான எமது முயற்சிகள் தொடர்கின்றன. தமிழ் மக்கள் பலமாய் இருப்பதற்கு அவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டியது அத்தியாவசியம். பல்வேறு காரணிகள் நிமித்தம் மக்கள் மத்தியில் எல்லாக் கருமங்களிலும் ஒருமித்த கருத்து இருப்பது, ஒரு கடினமான விடயம்.

ஆனால் தமிழ் மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமைதான் அவர்களுடைய பலம். அவர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள்.

சமீபத்தில்கூட நாட்டில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டபொழுது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள், விசேசமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள், ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட்ட காரணத்தின் நிமித்தம், நாங்கள் எமது பலத்தை நிரூபிக்கத் தக்கதாக இருந்தோம்.

இந்த வருடத்தில் தேர்தல்கள் நடைபெறும். மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பன நடைபெற வேண்டும். வருகின்ற வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம், அல்லது அதற்கு முன்பாகவும் நடைபெறலாம், இந்தவிதமான கருமங்கள் நடைபெறுகின்ற போது தமிழ் மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக தங்களுடைய செயற்பாட்டின் மூலமாக தற்களுடைய பலத்தை பிரதிபலிக்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாங்கள் எடுக்க வேண்டிய அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கின்றோம். அரசியல் கைதிகளை விடவில்லை என நாங்கள் சொல்ல முடியாது ஐம்பது வீதமானவர்கள் விடுபட்டிருக்கின்றார்கள்.

மற்றவர்கள் விடுபடுவதை பொறுத்தவரையில், இருக்கின்ற அரசியல் கைதிகளை விடுவித்தால், பெரும்பான்மை மக்களின் மத்தியில் சில அரசியல்வாதிகள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஆட்சியிலுள்ளவர்கள் பாதகமாகப் பயன்படுத்துவார்கள் என்பதன் நிமிர்த்தம், அதில் தாமதங்கள் இருக்ககின்றன.

ஆனால் எமது முயற்சி அந்த விடயம் சம்பந்தமாக தொடர்கின்றது. அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரரேரணை தொடர்பில் எமது கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எமது நாடாளுமன்ற குழு கூடி, உரிய நேரத்தில எடுக்க வேண்டிய முடிவை நாங்கள் அறிவிப்போம் என கூறியுள்ளார்.