காரைநகர் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

Report Print Yathu in சமூகம்

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விவசாய பிரதியமைச்சருமான அங்கஜன் இராமநாதனின் விசேட செயற்திட்ட நடைமுறை மூலம் காரைநகர் பிரதேசத்தில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்களின் குடி நீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், இருக்கும் நீர்நிலைகளை புனரமைத்து, சுத்தம் செய்து பாதுகாக்கும் பொருட்டு, நன்னீர் கிணறுகள், கேணிகள் மற்றும் குளங்கள், வாய்க்கால்கள், தடுப்பணைகள் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன,

இதேவேளை நன்னீர் நிலைகளை ஏற்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டம் குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கள விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆராய்ந்திருந்தார்.

காரை நகரிலுள்ள 56 நன்னீர் கிணறுகளை மக்கள் பாவனைக்கு பெற்றுக்கொடுக்கும் வகையிலான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 18 கிணறுகள் இதுவரை மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படையினரின் மனித வலுக்கள் மற்றும் இயந்திர வலுக்களை பயன்படுத்தி, தற்போது இரண்டு குளங்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் ஊடாக 12 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் குடிநீர்ப்பிரச்சினை காரணமாக குறித்த பகுதியில் குடியேறாமல் இருந்த மக்கள் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டால் குறித்த பகுதிக்கு மீள் வருகையினை ஏற்ப்படுத்தலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுகாதார வைத்திய அதிகாரி பரா நந்தகுமார், பிரதேச செயலக மற்றும் கமநல உத்தியோகத்தர்கள், சம்மேளன உறுப்பினர்கள், கிராம சக்தி தவிசாளர்கள் மற்றும் பிரதேச மக்களுடன் இணைந்து முன்னாள் விவசாய பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் (20)அன்று காலை கண்காணிப்பு கள விஜயம் ஒன்றை காரைநகர் பிரதேசத்தில் மேற்கொண்டிருந்தார்.