ஏறாவூரில் இயல்பான வியாபார நடவடிக்கையை முன்னெடுக்க விசேட கலந்துரையாடல்

Report Print Navoj in சமூகம்

ஏறாவூரில் இயல்பு நிலையை தோற்றுவித்து வழமை போல் அன்றாட கடமைகளை மக்கள் நிறைவேற்றுவது தொடர்பிலும் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலுமான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் ஏறாவூர் பிரதேச கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு பிரதானிகளுடனும், உயர் அதிகாரிகளுடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து பிரதேச மட்ட சந்திப்பு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களைப் போன்று பிரதேசத்தில் இயல்பு நிலை தோற்றுவிக்கப்பட்டு ரமழான் நேரத்தில் பள்ளிவாசல்களில் வணக்க வழிபாடுகளை முன்னெடுப்பது பற்றியும், வர்த்தகர்கள் தமது இரவு நேர வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் இங்கு இராஜாங்க அமைச்சரினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் இயல்பு நிலையை தோற்றுவிப்பதற்காக பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்பும் கோரப்பட்டதுடன், ஏறாவூர் பொலிஸாரின் கடந்த கால நடவடிக்கைகளுக்காக நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

பிரதேசத்தின் இயல்பு நிலைக்காக தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயார், இரவு நேர வணக்க வழிபாடுகள் வியாபார முன்னெடுப்புக்களுக்கு எவ்வித தடைகளும் இடையூறுகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும்.

பள்ளிவாசல்களில் பாதுகாப்பு விழிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு கண்காணிப்புடன் செயற்பட வேண்டும், அவரரவர் பெரும்பாலும் தாங்கள் வசிக்கும் பள்ளிவாசல்களிலேயே வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.

பிரதான வீதிகளை பயன்படுத்துவோர் மோட்டார் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, பிரதான வீதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் பிரதேசத்தின் புதிய நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் அங்கிருந்தோரால் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பில் ஏறாவூர் நகர சபை, சம்மேளனம் ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் அதே வேளை, சம்மேளனத்தின் கீழ் உள்ள ஏறாவூர் வர்த்தக சங்கம், உலமா சபை, உட்பட ஊரின் பொறுப்பு வாய்ந்த சகல நிறுவனங்களுக்கு தெளிவு படுத்துவதுடன், பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு தெரியப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயசுந்தர, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் யூசுப், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான நழீம் மற்றும் சுலைஹா ஆகியோரும், ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், மற்றும் ஊரின் சமூக ஆர்வலர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.