தந்தை செல்வாவுடன் இணைந்து அரசியல் செய்த நீதிபதி இளஞ்செழியனின் தந்தை மாணிக்கவாசகம்!

Report Print Dias Dias in சமூகம்

தமிழர்களால் தந்தை என்று அழைக்கப்பட்ட தந்தை செல்வாவுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான அரசியல் களப்பணியினை மாணிக்கவாசகம் அவர்கள் மேற்கொண்டு, இறக்கும் வரை அக்கட்சியின் பிரமுகராக செயற்பட்டிருக்கிறார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தகப்பனார் சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் அண்மையில் வேலணையில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் - கொக்குவில், கேணியடியிலுள்ள அன்னாரின் புதல்வரான யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறையனின் இல்லத்தில் சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் தொடர்பான சிறு அரசியல் பின்னணி தற்போது வெளியாகியிருக்கிறது. கடந்த 1960ஆம் ஆண்டு தந்தை செல்வாவுடன் இணைந்து அரசியல் செய்தவர் தான் நீதிபதி இளஞ்செழியனின் தந்தையார் சதாசிவம் மாணிக்கவாசகம். தமிழரசுக் கட்சியிலிருந்து விஎம் நவரட்ணம் விலகிய போது அவருக்கு ஆதரவு கொடுத்தார்.

பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். எனினும் இறக்கும் வரையும் தமிழரசுக் கட்சியின் பழம் பெறும் மூத்த அரசியல் பிரமுகராக இருந்திருக்கிறார்.

தீவகம் யாழ்ப்பாணம் பகுதிகளில் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டார். தந்தை செல்வாவுக்கு மிக நெருங்கிய அரசியல் சகாவாக பணியாற்றியிருக்கிறார் என்கிறார்கள் மூத்த தலைவர்கள்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியில் இவரின் செயற்பாடுகளை கௌரவிக்கும் முகமாக இறுதி அஞ்சலியின் போது தமிழரசுக் கட்சியின் கொடியினை போர்த்தியிருக்கிறார் மாவை சேனாதிராஜா.

இலங்கை மக்களுக்கு நீதியின் காவலனாக தன்னுடைய மகனை அளித்திருந்த மாணிக்கவாசகம் அவர்கள் தன் வாழ் நாளில் தமிழ் மக்களின் அரசியல் குறித்தும் அதிகம் செயற்பட்டிருக்கிறார் என்பதும் வரலாற்றுச் சிறப்பாக அமைந்திருக்கிறது.