ஐ.எஸ் பயங்கரவாதிகளை காட்டி கொடுத்த நெருங்கிய உறவினர்களின் இரத்த மாதிரிகள்! புதிய தகவல்

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையின் எட்டு இடங்களில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட ஒன்பது குண்டுதாரிகளினதும் இரத்த மாதிரிகள், அவர்களின் நெருக்கமான உறவினர்களிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளுடன் ஒத்துபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட முழு விபரத்தை மேற்கோள்காட்டி அரச பத்திரிகையொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில்,

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் ஸஹ்ரான் அந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளமை (டீ.என்.ஏ) மரபணுப் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் மொஹம்மட் ஸஹ்ரான் உட்பட எட்டு இடங்களில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட ஒன்பது தற்கொலைக் குண்டுதாரிகளினதும் நெருக்கமான உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி, டீ.என்.ஏ பரிசோதனையின் போது ஒத்துப் போயுள்ளதென அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் பொலிஸ் தலைமையகத்திற்கு நேற்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்கொலைக் குண்டுதாரிகள் தொடர்பில் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட மரபணுப் பரிசோதனை அறிக்கை தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்றது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்,

கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் காத்தான்குடியை சேர்ந்த மொஹம்மட் ஸஹ்ரான் என்பவர் என்றும் இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஸஹ்ரான் இந்த தாக்குதலில் உயிரிழக்கவில்லை என்றும் அவர் தொடர்ந்தும் உயிர் வாழ்வதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இதனையடுத்து மக்கள் மத்தியில் மேலும் அச்சம் நிலவ தொடங்கியது.

அத்துடன் டீ.என்.ஏ பரிசோதனையின் மூலம் ஸஹ்ரான் உட்பட ஏனைய தற்கொலை குண்டுதாரிகளினதும் மரணம் தொடர்பில் உறுதி செய்வதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் பெற்றோர்கள் மனைவி மற்றும் பிள்ளைகள் என இரத்த உறவினர்களிடமிருந்து இரத்த மாதிரி பெறப்பட்டு மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மரபணுப் பரிசோதனை அறிக்கையை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன் விபரங்கள் பின்வருமாறு:

ஷங்கிரில்லா ஹோட்டல் தாக்குதல்

கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் இரு தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்ரான் ஆவார்.

சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த ஸஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு சாய்ந்தமருது தற்கொலைக் குண்டு தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பிய ஸஹ்ரானின் மனைவி மற்றும் மகளது இரத்த மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அது ஸஹ்ரானின் டீ.என்.ஏ உடன் ஒத்துப்போயுள்ளமையினால் ஸஹ்ரான் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஷங்கிரில்லா மற்றும் சினமன் ஹோட்டல்களின் தாக்குதல்கள்

கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் மொஹம்மட் இப்றாஹிம் இல்ஹாம் அஹமடும், சினமன் ஹோட்டலில் மொஹம்மட் இப்றாஹிம் இன்ஷாப் அஹமடும் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

தற்போது சி.ஐ.டியின் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் மேற்படி இரு தற்கொலைதாரிகளினதும் தந்தையான மெஹம்மட் இப்றாஹிமின் இரத்த மாதிரி பெறப்பட்டுள்ளதுடன் பரிசோதனையில் அது ஒத்துப்போயுள்ளது.

கட்டுவாப்பிட்டி தேவாலய தாக்குதல்

அச்சி மொஹம்மட் மொஹம்மட் ஹஸ்தூன் என்ற குண்டுதாரி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் மீதான தாக்குதலை மேற்கொண்டிருந்தார். இவரது பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி ஒத்துப் போயுள்ளது.

கொச்சிக்கடை தேவாலய தாக்குதல்

அலவுதீன் அஹமட் முஆத் என்ற தற்கொலைக் குண்டுதாரியினால் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவரது பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி ஒத்துப்போயுள்ளது.

தெஹிவளை, ட்ரொபிகல் இன் ஹோட்டல் தாக்குதல்

அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மட் என்ற தற்கொலைக் குண்டுதாரியினால் தெஹிவளை, ட்ரொபிகல் இன் ஹோட்டலில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவரது மனைவி மற்றும் பிள்ளைகளிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி ஒத்துப்போயுள்ளது.

மட்டக்களப்பு தேவாலய தாக்குதல்

மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸாத் என்ற தற்கொலைக் குண்டுதாரியினால் மட்டக்களப்பு ஸியோன் தேவலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவரது தாயிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி ஒத்துப் போயுள்ளது.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் தாக்குதல்

மொஹம்மட் அஸாம் மொஹம்மட் முபாரக் என்ற தற்கொலைக் குண்டுதாரியினால் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவரது மனைவி மற்றும் பிள்ளைகளிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி ஒத்துப்போயுள்ளது.

தெமட்டகொட மஹவில மாவத்தை வீட்டில்

தெமட்டகொட, மஹவில வீதியில்லுள்ள இப்றாஹிமின் வீட்டில் இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின, இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

இதில் குண்டை வெடிக்கச் செய்தவர் என சந்தேகிக்கப்படும் மொஹம்மட் பாத்திமா ஜிப்ரி என்ற குண்டுதாரி ஷங்கிரிலா ஹோட்டல் குண்டுதாரிகளில் ஒருவரான மொஹம்மட் இப்றாஹிம் இல்ஹாமின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் என்றும் டீ.என்.ஏ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச பகுப்பாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது என்றார்.

Latest Offers