தற்கொலைதாரியுடன் தொடர்பு! கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரியுடன் தொடர்பை பேணியதாக கூறப்படும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக தெரிவித்தே குறித்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை குண்டுதாரியின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மற்றும் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட் ஆகியோருக்கிடையில் கையடக்கத்தொலைபேசி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.