மட்டக்களப்பில் விவசாய அபிவிருத்திக்குழுக்கூட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் நீர்பாசன மற்றும் சிறு நீர்பாசனத்திட்டங்களின் ஊடாக நெற்செய்கை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் உரமானியங்களை முறையாக விநியோகிப்பது குறித்தும், விநியோகிக்கப்படும் மானியங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 176 பாடசலைகளில் முன்னெடுக்கப்படும் பழமர தோட்டம் செய்கை தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டதுடன், அது தொடர்பான முழுமையான அறிக்கையினை மாவட்ட செயலகத்திற்கு வழங்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் படைப்புழுத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சோளம் செய்கையாளர்களுக்கு நஸ்ட ஈடுகள் வழங்கப்பட்டு வருவது தொடர்பிலும், எதிர்காலத்தில் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடுகள் வழங்கப்படுவது குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய காப்புறுதி திட்டம் ஊடாக நஸ்ட ஈடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 33670 ஏக்கரின் நெற்செய்கை பண்ணப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும் உரம் வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விவசாய அமைப்புகள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் இதன்போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் இக்பால் உட்பட நீர்பாசண திணைக்கள,கமநல சேவைகள் திணைக்கள பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.