சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் விசாரணை

Report Print Kamel Kamel in சமூகம்

தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒருவர், சுமார் 4 ஆயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதாக இன்று சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த விசாரணைகளை நடத்தவுள்ளது. அத்துடன் இந்த செய்தி சம்பந்தமாக இன்று நாடாளுமன்றத்திலும் கவனம் செலுத்தப்பட்டது.

இது குறித்து பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் விசாரித்ததாகவும் அவர்கள் இது பற்றி அறிந்திருக்கவில்லை எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளைய தினம் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சிங்கள மக்களை தூண்டி விடும் நோக்கில் இனவாத அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இப்படியான செய்திகளை வெளியிட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை பயன்படுத்தி சிலர் தமது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ள இனவாதத்தை தூண்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தின் மூலமே நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதியாகும்.

இதனை செய்வதற்கு பதிலாக இனவாதத்தை தூண்டி அதில் குளிர்காய சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர் எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.