கிழக்கு ஆளுநரின் விடுதி பராமரிப்பு செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அநாதைச் சிறுவர்களின் கல்விக்கு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாண ஆளுநரின் விடுதிக்கான பராமரிப்பு செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அநாதை சிறுவர்களின் கல்வி உதவிக்காக வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலை விவேகானந்தா பாடசாலையில் நடைபெற்றது.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட தந்தையை இழந்த 84 ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான முதற்கட்ட நிகழ்வு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புலமைப் பரிசிலினை வழங்கி வைத்தார்.

15000 ரூபா குறைந்த வருமானங்களை பெறும் குடுபங்களை சேர்ந்த மாணவர்கள் கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இப்புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள வருமானம் குறைந்த அநாதை சிறுவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் விடுதிக்காக வருடமொன்றுக்கு ஒதுக்கப்படுகின்ற 200 இலட்சம் ரூபா பணத்திலிருந்து 120 இலட்சம் ரூபா இத்திட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு அமைச்சுக்களின் செயலாளர், திணைக்கள தலைவர் மத குருமார்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சிறுவர்களின் தாய்மார்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இத்திட்டம் எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற அனைத்து கல்வி வலயங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.