பாகிஸ்தான் அகதிகளை நாட்டிற்கு கொண்டு வருவது அருகிலுள்ள நாட்டிற்கும் பிரச்சினை - சுரேஸ் பிரேமசந்திரன்

Report Print Sumi in சமூகம்

பாகிஸ்தான் அகதிகளை எமது நாட்டிற்கு கொண்டு வருவது எமது மக்களை மாத்திரமன்றி,அருகில் உள்ள நாட்டிற்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதனை தெளிவாக புரிந்து நடந்துகொள்ள வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் கூல் பாகிஸ்தான் அகதிகளை அழைத்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்க வைத்திருந்தமை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த மதமும் அன்பையும் கருணையும் போதிக்கின்ற மதங்கள் தான். எந்த மதமும் எதிலிகளையும், அகதிகளையும் புறந்தள்ளும் மதங்கள் அல்ல.

தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவனாக இருந்தாலும் கூட, அரசியல் பிரமுகர்கள் தென்னிந்திய திருச்சபையில் இருக்கின்றார்கள்.

அவர்களின் விருப்பம் கருதி கொண்டுவரப்பட்டார்களா என்று கேட்கப்பட வேண்டிய விடயமாக கூட இருக்கலாம். ஆகவே, அவ்வாறானவர்கள் தாங்கள் நேரடியாக கொண்டு வந்தால், அரசியல் வாழ்விற்கு பாதிப்பு ஏற்படும் என்ற யோசனையில், தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கூட இதற்குப் பின்புலமாக இருக்கக்கூடும்.

ஆகவே, இதைப்பற்றி முழுமையான தகவல் கிடையாது. எனவே, மதம் சொல்கின்றது. ஆகவே, நான் செய்கின்றேன் என்பது ஒரு விடயமல்ல.

இன்றைய சமுதாயத்தில் என்னென்ன பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கின்றது. எமக்கு மிக அருகாமையில் இருக்கக்கூடிய இந்திய நாட்டிற்கு உபத்திரவம் கொடுக்கக்கூடிய வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாதென்றும் நான் கருதுகின்றேன்.

இந்தியா மிகப் பெரியதொரு நாடு. அவர்களின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. இவ்வாறானவர்களை இங்கு கொண்டு வருவதென்பது, எமது மக்களுக்கு மாத்திரமன்றி, அருகில் உள்ள நாட்டிற்கும் பிரச்சினையாக மாறலாம்.

அந்தவகையில், எதிலிகள் சம்பந்தமாக தெளிவான சிந்தனைகள் இவ்வாறானவர்களுக்கு இருக்க வேண்டுமென்றே நான் கருதுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.