அபிவிருத்திகள் அனர்த்த அபாய முகாமைத்துவத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட வேண்டும்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

அபிவிருத்திச் செயற்பாடுகள், அனர்த்த ஆபாயக்குறைப்பு முகாமைத்துவ விடயங்களை உள்வாங்குவதாக முன்னெடுக்கப்படுவதன் மூலம் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதாக மாற்றம் பெறும் என திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்கே.சுகுணதாஸ் தெரிவித்தார்

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலகத்தில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சமூக மட்ட அனர்த்த முகாமைத்துவச் செயற்பாட்டை வலுப்படுத்துதல் சம்பந்தமான கருத்தரங்கில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கிராம மட்டங்களில் அனர்த்த முகாமைத்துவக்குழுக்களை வலுப்படுத்துவதன் ஊடாக கிராம மட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித்திட்டங்களினுள் அனர்த்த அபாய முகாமைத்துவ விடயங்களை உள்வாங்க முடியும்.

அவ்வாறு உள்வாங்கப்படுவதன் மூலம் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பயன்படுத்த முடியும். அத்தோடு மக்களின் வாழ்வாதார நிலையிலும் முன்னேற்றகரமான மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும்.

கிராமம், பிரதேசம், மாவட்டம், என அனைத்து விடயங்களிலும் அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் உள்வாங்கப்படுவது எதிர்காலத்திற்குச் சிறப்பானதாகும்.

சமூக மட்ட அனர்த்த அபாய முகாமைத்துவச் செயற்பாடுகளை வலுப்படுத்துதல், சமூக மட்ட அனர்த்த முகாமைத்துவ திட்டத்தினைத் தயாரித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் குச்சவெளி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.

பிரதேசத்தின் கிராம சேவையாளர்கள், சமூர்த்தி உத்தியோகத்தகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள், வளவாளர்களால் இக்கருத்தமர்வு நடத்தப்பட்டதுடன், பங்கு கொண்டவர்களின் சந்தேகங்களுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டன.