யாழில் சிவில் உடையில் களமிறங்கிய பொலிஸார்! வாள்வெட்டு குழுவை சேர்ந்த ஒன்பது பேர் கைது

Report Print Sumi in சமூகம்

தனுரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் வைத்து குறித்த ஒன்பது பேரும் இன்று மாலை கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“இன்று தனு ரொக்கின் பிறந்தநாள் என்ற தகவலை அறிந்த யாழ். மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவினர் மானிப்பாய் பகுதியில் சிவில் உடையில் களமிறக்கப்பட்டனர்.

இதன்படி, மானிப்பாயில் தனு ரொக்கின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு பின்பக்கமாக உள்ள குளக்கட்டுப் பகுதியில் பிறந்தநாள் கொண்டாடிய ஐந்து பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து நவாலி வயல் வெளி பகுதியில் வைத்து தனு ரொக்கின் மற்றொரு பகுதியினர் பிறந்த நாள் கொண்டாடிய போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தனு ரொக்கும் அடங்குவார்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு மட்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் இருவரும் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர்.

தனுரொக் உள்ளிட்ட சிலர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள்.

கைது செய்யப்பட்ட 9 பேரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்கள்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆவா குழுவின் உறுப்பினர் மனோஜ் என்பவருடைய பிறந்த தினத்தை கடந்த புதன்கிழமை யாழ். நல்லூரில் உள்ள விடுதி ஒன்றில் கொண்டாடிய போது, பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

இதன்போது பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில் ஐவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers