முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்து வருகின்றது

Report Print Rusath in சமூகம்

இலங்கையில் முப்பது வருடகால ஆயுத யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து, சிறுபான்மை மக்களின் முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்து வருகின்றது என இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் வசந்தராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஈராண்டுக்கான பொது சபைக்கூட்டம் மட்டக்களப்பு மன்ரேசா வீதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய ஒரு சூழ்நிலை கடந்த பத்து வருடங்களாக நிலவி வந்திருந்தது.

ஆனால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்திலே யாரும் எதிர்பார்க்காத நிலையிலே கற்பனை கூட பண்ணியிருக்காத அளவுக்கு கத்தோலிக்க கிறிஸ்த்தவ ஆலயங்களிலும், உல்லாச பயணிகள் தங்கும் ஆடம்பர விடுதிகளிலும், தற்கொலை குண்டுதாரிகளின் மனித வெடிகுண்டுகள் வெடித்தன.

இதனால் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவிக் குடிமக்கள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். 500 இற்கும் அதிகமான குடிமக்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இன்னும் சிலர் வைத்தியசாலைகளிலே இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அனேகமானோர் உள தாக்கத்துக்கு உட்பட்ட நிலையில் நடைப்பிணங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இக்குண்டு வெடிப்புக்களுக்கு ஐ.ஸ்.ஐ.ஸ் என்ற உலக தீவிரவாதிகள் உரிமை கொண்டாடியுள்ளனர். இதன் அர்த்தம் இலங்கை நாட்டுக்குள் ஐ.ஸ்.ஐ.ஸ் தீவிரவாதம் உருவாகியுள்ளது என்பதுதான்.

இது மிகவும் அபாயகரமானது. உலகமே இவர்களைக் கண்டு அஞ்சுகிறது. நமது நாட்டிலும் இப்போது எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலமையிலே இன, மத, சாதி மற்றும் மொழி வேறுபாடின்றி பாதிக்கப்படுகின்ற மக்களின் துன்ப துயரங்களை போக்கும் மனிதாபிமான பணியைச் செய்ய வேண்டியது செஞ்சிலுவை இயக்கத்தின் தலையாய கடமையாகும்.

கடந்த யுத்த காலத்திலே விடுதலைப் போராளிகளுக்கும் ஆயுதப்படைகளுக்கும் இடையிலே ஏற்பட்ட திடீர் திடீர் துப்பாக்கிச் சண்டைகளின் போதும், திடீர் திடீர் வெடிப்புச் சம்பவங்களின் போதும் இடையில் அகப்பட்டு காயப்பட்ட சாதாரண குடிமக்களுக்கான முதலுதவிச் சிகிச்சைகளை துணிவோடும், அக்கறையோடும் செய்து அவர்களை வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் சென்று அவர்களது உயிர்களைக் காப்பாற்றிய அனுபவம் நமது தொண்டர்களுக்கு உண்டு.

அந்த நேரத்திலே அரச நிறுவனங்களினாலும் ஏனைய நிறுவனங்களினாலும் பாதிக்கப்பட்ட இடங்களை அடையவோ அங்குள்ள மக்களுக்கான அவசரத் தேவைகளை உடன் மேற்கொள்ளவோ முடியாமலிருந்தது.

அப்போது செஞ்சிலுவை இயக்கமே தமது தொண்டர்களுடன் அத்தகைய இடங்களை அடைந்து உரிய அவசர நேர உதவிகளையும் அவசர நிவாரண பணிகளையும் மேற்கொண்டிருந்தது.

1995ஆம் ஆண்டு 5ஆம் திகதி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலே தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இரு குழுக்களுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சமர் இடம்பெற்றது.

அத்தருணத்திலே கல்முனையிலிருந்து குடிமக்களை ஏற்றி மட்டக்களப்பை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று அத்துப்பாக்கிச் சமரினுள் அகப்பட்டுக் கொண்டது.

அதில் பிரயாணம் செய்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களது உற்றார் உறவினர்கள் பதறி திரிந்தார்கள்.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் போது செஞ்சிலுவை இயக்கம் எவ்வாறு மனித பணிகளை நடுநிலை நின்று வேறுபாடின்றி சுதந்திரமாக துணிவாக மேற்கொண்டதோ அதே போன்று எதிர்காலத்திலும் செயற்பட எம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

அமைதியாக ஆடம்பரமின்றி விளம்பரமின்றி இவ்வளவு காலமும் எவ்வாறு செயற்பட்டோமோ அவ்வாறே மீண்டும் நாம் செயற்பட வேண்டிய காலம் ஒன்று உருவாகியுள்ளதாக தெரிகிறது.

யுத்த காலத்திலே செயற்பட்டதை போன்ற எதிர்காலத்திலேயும் செயற்படுவதற்காக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையானது புதிய தொண்டர் அணி ஒன்றினை உருவாக்குவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.

எனவே அனுபவம் உள்ள செஞ்சிலுவைத் தொண்டர்கள், மனிதாபிமான பணியை மேற்கொள்ள ஆசைப்படும் தொண்டர்கள் மட்டக்களப்பு மாவட்ட செஞ்சிலுவை சங்கக் கிளையில் இணைந்து கொள்ளுமாறு கிளை நிர்வாக குழு உங்களை வேண்டிக் கொள்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers