சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சமய விழாக்கள் மிக முக்கியமானதாக அமைகின்றது

Report Print Ashik in சமூகம்

ஒவ்வொரு சமயங்களினதும் ஆழமான கருத்துக்களை புரிந்து கொள்கின்ற போது சமய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு சாத்தியப்படுகின்றது என மன்னார் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் 'இலங்கையில் உள்ள அனைத்து மதங்களுக்கிடையில் சகிப்புத்தன்மை மற்றும் இனக்கத்திற்கான பொதுவான பார்வையினை ஊக்குவித்தல்' எனும் கருப்பொருளில் மன்னார் சாந்திபுரத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் இன்று இடம் பெற்ற வெசாக் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சமயங்களில் இருக்கின்ற விசேட விதமான பண்டிகைகளை நாங்கள் கொண்டாடுகின்றதன் நோக்கம் ஒரு சமயத்தைப் பற்றி இன்னோர் சமயத்தைச் சார்ந்தவர்கள் நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்வது சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தான் இதன் முக்கியமான நோக்கமாக உள்ளது.

பல விழாக்கள் இருக்கின்றன. பல்வேறு கொண்டாட்டங்கள் இருக்கின்றன. இதன் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களினுடைய நல் வாழ்விற்காக அந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சர்வமத, சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்வுகளுக்கு சமய விழாக்கள் மிக முக்கியமானதாக இருக்கின்றது.

ஒவ்வொரு சமயங்களிலும் இருக்கின்ற படிப்பிணைகளும் மற்றையவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

ஒவ்வொறு சமயங்களினுடைய விழாவை கொண்டாடுகின்ற போது குறித்த விழாவில் ஏனைய மதத்தவர்களும் கலந்து கொண்டு நிகழ்வுகளை பார்க்கின்ற போது அதனுடைய உள்ளார்ந்த ஆழமான கருத்துக்களை மற்றவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக அமைகின்றது.

ஒவ்வொறு சமயங்களினதும் ஆழமான கருத்துக்களை புறிந்து கொள்ளுகின்ற போது சமய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு சாத்தியப்படுகின்றது.

இந்த 'வெசாக் விழா' பௌத்தர்களுக்கு முக்கியமானதொரு விழாவாக அமைந்திருக்கின்றது. பல்வேறு விதமான தோரணங்களை அமைத்து அந்த வெசாக் நிகழ்வை முன்னிலைப்படுத்தி அதனை கொண்டாடுகின்றார்கள்.

அந்த சமையத்தைச் சார்ந்தவர்களுக்கு அந்த நிகழ்வு முக்கியமானதாகவும், அந்த நிகழ்வின் பின்னனியும் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்களும் அவர்கள் அந்த சமயத்தை பின்பற்றி சமயம் கூறுகின்ற நல்லெண்ண கருத்துக்களை பின்பற்றி நல்வாழ்வு வாழுகின்றனர்.

ஏனைய சமயத்தவர்களாகிய நாங்கள் ஒரு விழாவைக் கொண்டாடுகின்ற போது அதில் நாங்களும் பங்கெடுக்கின்ற போது அவர்கள் தமது சமயத்தில் வைத்திருக்கின்ற நம்பிக்கை எமக்கு புலப்பட்டு அந்த சமயம் சார்ந்தவர்களோடு நல்லிணக்கம் சகவாழ்வை வாழ எமக்கு உறுதுனையாக அமையும்.

சமயங்கள் தனித்துவமானது. சமயங்களின் படிப்பினைகளும் தனித்துவமானது. எனவே எமது சமயத்தை பின் பற்றி ஏனைய சமயங்களை மதிக்கின்ற ஒரு தன்மை வெளிப்படுத்தப்படுகின்றது. அது தான் இவ்வாறான நிகழ்வுகளினுடைய நோக்கமாக அமைகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த வெசாக் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், கிராம அலுவர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், சர்வமதத்தையும் சேர்ந்த மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.