வன்முறையின் போது தமிழர் ஒருவரை கடுமையாக தாக்கிய இராணுவத்தினர்! காலம் கடந்து வெளியாகும் தகவல்

Report Print Murali Murali in சமூகம்

அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது தமிழர் ஒருவரை இராணுவத்தினர் கடுமையாக தாக்கிய சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிபிசி தமிழ் வெளியிட்டுள்ள செய்தியில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டதுடன், முஸ்லிம்களின் உடமைகளுக்கு கடுமையான தேசம் விளைவிக்கப்பட்டது.

குருநாகல், கம்பஹா மற்றும் புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், தமிழர் ஒருவர் மீதும் இராணுவத்தினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு படையினர் துணைபோனதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அதனை இராணுவ தளபதி மறுத்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, நாத்தாண்டியா பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வரும் குமார் என்பவர் மீது இராணுவத்தினர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பிபிச் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து குமார் பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில்,

“நாத்தாண்டி பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், தனது வர்த்தக நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, தான் துன்மோதர பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்றேன்

வர்த்தக நிலையத்திற்கு சென்று, வர்த்தக நிலையத்திற்கு ஏற்பட்ட சேதங்களை ஆராய்ந்து கொண்டிருந்த தருணத்தில், வாகனம் ஒன்றில் வந்த இராணுவத்தினர் எந்தவித விசாரணைகளும் இன்றி என்னை அழைத்து சென்றனர்.

இவ்வாறு வாகனத்திற்குள் ஏற்றிய தன்னை, பல இராணுவத்தினர் ஒன்றிணைந்து, சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக தாக்கினர். இராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த தருணத்திலேயே, வாகனத்திற்குள்ளே இருந்த இராணுவத்தினர் தன்னை தாக்கினர்.

தன்னை தாக்கியதற்கான அடையாளங்களையும் குமார் காட்டினார். சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னரே "ஏன் அந்த இடத்தில் நின்றாய்" என இராணுவத்தினர் வினவினர்.

அது தனது வர்த்தக நிலையம் எனவும், தனது வர்த்தக நிலையத்திற்கு அருகில் தனக்கு இருக்க முடியாதா எனவும் தான் இராணுவத்திடம் மீண்டும் கேட்டேன்.

அதற்கு, ஏன் இந்த விடயத்தை இதற்கு முன்னதாகவே தெரிவிக்கவில்லை என இராணுவத்தினர் கேட்டனர். பேசுவதற்கு இடமளிக்கான நிலையில், தன்னால் எவ்வாறு கூறமுடியும் என இராணுவத்தினரிடம் கேட்டேன்.

பின்னர், வர்த்தக நிலையத்திலிருந்து பல கிலோ மீற்றர் தொலைவில் தன்னை இறக்கிவிட்டு, எந்தவித மன்னிப்பும் கோராத நிலையில் இராணுவத்தினர் சென்றதாக” குமார் பிபிசி தமிழிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இராணுவ பதில் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் செனவிரத்ன, “குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை” என கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு அறிவித்து, சம்பவம் குறித்து ஆராய்வதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.