மோதகத்தினுள் அட்டை இருந்தமை தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்களின் தகவல்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். சித்தங்கேணி சந்தியில் உள்ள உணவகத்தில் வாங்கப்பட்ட மோதகத்தினுள் அட்டை இருந்தமை தொடர்பில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உணவகத்தை சோதனையிட்டுள்ளனர்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தவேதன், சங்கானை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கே.லதன் ஆகியோர் இணைந்து உணவகத்தை சோதனையிட்டதுடன், சுகாதார விதி மீறப்பட்டமைக்கான சாத்தியங்கள் காணப்படவில்லை எனவும், மோதகத்தினுள் இருந்ததாகக் கூறப்படும் அட்டை நீரில் அவிந்தமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.

எனினும், இது தொடர்பாக தாங்கள் அதிக கரிசனை எடுத்துள்ளதுடன், இதன் உண்மைத்தன்மை தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் கருத்துக் கூறுகையில், குடும்பப் பெண் ஒருவருக்கு வாழ்வாதாரம் வழங்கும் நோக்கத்துடன், அவரிடம் இருந்தே தினமும் மோதகம் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது என்றார்.

இதேவேளை, நேற்று மாலை மேற்படி உணவகம் உட்பட சித்தங்கேணி மற்றும் சங்கானைப் பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார நடைமுறைகள் தொடர்பாக கடும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers