இளைஞர்கள் குழு கூரிய ஆயுதங்களால் தாக்குதல்: 3 பெண்கள் உட்பட 7 பேர் காயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, தாலிக்குளம் பகுதியில் வீடு புகுந்து இளைஞர் குழு கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 3 பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை வவுனியா, தாலிக்குளம் பகுதியில் திருமண வைபவம் ஒன்று இடம்பெற்று அதன்பின் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின் போது இரு பகுதியினருக்கு இடையில் கடும் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்ட ஒரு பகுதி இளைஞர்குழு நேற்று மாலை தம்முடன் முரண்பட்ட மற்றைய குழுவினரின் வீட்டில் புகுந்து வாள், கத்தி, பொல்லு, போத்தல் போன்ற கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் இரு பகுதியினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் இரவு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers