இந்து மதத்துக்கு எதிரான போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: வேலுகுமார்

Report Print Ajith Ajith in சமூகம்

தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் இந்து மக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் மதப்போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் இன்று இந்து மத செயற்பாட்டாளர்கள் சிலருடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

போர் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கிலுள்ள இந்து மக்களின் பூர்வீக வழிபாட்டு தலங்களும், அடையாளச் சின்னங்களும், தொல்லியல் எச்சங்களும் திட்டமிட்ட அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்டுவருவதாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

மன்னார், திருகோணமலை உட்பட நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் இவ்வாறான அட்டூழியங்கள் அரங்கேறுவது வேதனைக்குரிய விடயமாகும்.

சில அதிகாரிகளும் பக்கச்சார்பாகவே நடந்துக் கொள்கின்றனர். தொல்லியல் ஆய்வுக்காக செல்லும்போது எதற்காக பிக்குகளை அழைத்து செல்லவேண்டும்? மட்டக்களப்பு, அப்பாறை போன்ற இடங்களில் அப்படியான ஆக்கிரமிப்புகள் நடந்தேறியதை கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுடன் தொடர்புடைய இறைத் தலங்களிலும், ஏனைய இடங்களிலும் ஆய்வுகளை நடத்தவேண்டுமெனில், அதற்கான நடைமுறைகள் உரியவகையில் பின்பற்றப்படவேண்டும். மாறாக மக்களின் மனங்களை நோகடிக்கும் வகையில் எவரும் செயற்படக்கூடாது.

அதேபோல் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்ற போர்வையில் ஏதேச்சாதிகாரத்தை பயன்படுத்தி திடீரென ஒரு இடத்துக்கு நுழைய முற்படவும் கூடாது. எனவே, இது தொடர்பில் தெளிவானதொரு கொள்கைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதற்கான அழுத்தங்கள் விடுக்கப்படும்.

அண்மையில் கூட கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள விநாயகர் ஆலயத்துக்கும் சோதனை வந்தது. குறித்த ஆலயம் உரிய வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய வகையில் அறிவிக்கப்படாமல், உள்நுழையத் தடை என வளாகத்தில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பிக்குகள் சிலரே இதன் பின்னணியில் செயற்பட்டுள்ளனர்.

எனவே, மதத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் எவரும் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படக்கூடாது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.

மதம் என்பது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, அதை விளையாட்டுப்பொருளாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கருதக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers