மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்

Report Print Ashik in சமூகம்

இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்புச் சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப அலுவலகத்தில் இன்று காலை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார், வவுனியா பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர். பிரியதர்சன் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பின் பின்னர் மன்னார் பகுதிகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பாரதூரமானதும் , மிக முக்கியமாக கருதப்படக்கூடியதுமான விடயங்கள் தொடர்பாக மன்னார் சிவில் சமூக மட்ட பிரதிநிதிகளால் மனித உரிமை ஆணைக்ககுழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு-கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகளவிலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் அநாகரிகமான முறையில் நடத்தப்படுவதாகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

குறித்த கருத்துக்களை பெற்ற பின்னர் மனித உரிமைஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக பொதுமக்கள் அரச அதிகாரிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சில பகுதிகளில் இடம் பெற்றுவரும் கைதுகள் தொடர்பாகவும் சில முஸ்லிம் பிரதேசத்தில் இடம்பெறும் நிலம்சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

ஆணைக்குழு இவ்விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதுடன் இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சிவில்சமூக அமைப்புக்கள் மற்றும் புத்தி ஜீவிகளை அழைத்து மாவட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை எடுத்து கூறுவதோடு குறித்த கலந்துரையாடலுக்கு இராணுவ பொலிஸ்உயர் அதிகாரிகளையும் அழைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி ஆராய்ந்து பல முக்கியமான தீர்மானங்களை எடுக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில், சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகளின் பங்குபற்றியிருந்தனர்.

Latest Offers