நிறைவுக்கு வந்தது அத்துரலியே ரதன தேரரின் உண்ணாவிரத போராட்டம்

Report Print Malar in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்தை தற்போது நிறைவுக்கு கொண்டு வந்துள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன அதுரலிய ரத்ன தேரருக்கு அறிவித்துள்ளார். இதையடுத்து அவர் தமது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அத்துரலியே ரதன தேரர் கண்டி வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்ய கோரி அத்துரலியே ரதன தேரர் கடந்த 31ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இதையடுத்து இன்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் இன்று கையளித்துள்ள நிலையில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதங்களை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரின் கோரிக்கைக்கு தீர்வினை வழங்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதங்களையும் எழுதியிருந்தனர்.

இதையடுத்து போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.