விவாதத்தின் போதே முடிவெடுக்க முடியும்: கே.கே.மஸ்தான்

Report Print Thileepan Thileepan in சமூகம்

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து விவாதத்தின் போதே முடிவு எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது வெறும் குற்றச்சாட்டுகள் தானே. இவை சந்தேகத்தின் பேரில் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள்.

பாதுகாப்பு தரப்பு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பலரை கைது செய்துள்ளனர். அப்படி இவர்களுக்கும் தொடர்பு இருந்தால் இவர்களையும் கைது செய்திருப்பார்கள். அப்படி எதுவும் நடக்காமல் இருக்கும் போது இவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பது நன்றாகத் தெரியும். அரசாங்கத்திற்கும் இது நன்றாகத் தெரியும்.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நிலைப்பாடுகள் விவாதத்தின் போதே தெரியும். பிரேரணையில் சொல்லியிருக்கின்ற காரணங்கள் பிரச்சினைக்குரிய காரணங்களாக இருந்தாலும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதங்களின் போது அதன் உண்மைத் தன்மைகளை இரு தரப்பும் நிரூபிக்கும்.

அதைப் பொறுத்து அந்த நேரம் அந்த விடயத்தை பார்த்துக் கொள்ளலாம். நம்பிக்கையில்லா தீர்மானம் என்பதற்கு அப்பால் இது ஒரு சமூகப் பிரச்சினை. சமூகத்திற்கு எதிரான பிரச்சினை என்றால் ஜனாதிபதியுடன் பேசி கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக இருந்தாலும் நான் சமூகம் சார்ந்து சுதந்திரமாக செயற்பட முடியும்.

என்னுடைய முடிவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார். இருந்தாலும் இதில் கட்சி முடிவு எப்படி அமையும் என்பது இப்போது கூற முடியாது. சில குற்றச்சாட்டுக்கள் கடுமையாக வைத்தாலும் விவாதத்தின் போதே உண்மைத் தன்மையை பார்க்கலாம். நேரடியாக இல்லா விட்டாலும் அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சில உதவிகள் செய்திருக்காலாம்.

ஆனால் அவை இவ்வாறான தீவிரவாத நடவடிக்கைக்கு தான் செய்யப்பட்டதா என்று பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.