விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது

Report Print Jeslin Jeslin in சமூகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என இந்தியாவின் தி இந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியின் பிறந்ததினத்தினை முன்னிட்டு சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது. ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கருணாநிதி. அவர் முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டார்.

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலை புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்ட போருக்கு பிறகு கருணாநிதி மீதே வசவுகள் விழுந்தன.

இலங்கை விஷயத்தை பொருத்தவரையில், அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் அவர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கொண்டவர்.

அவர் வெளியில் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருவதுபோல சொல்லி வந்தாலும் அவருடைய நிலை என்னவெனில், இலங்கைக்குள் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். வேறு வழியில்லையென்றால், ஈழம் மலர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. சிலரைப்போல் தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் எனச் சொல்வது போன்றதோர் நிலை எடுப்பவராக அவர் இருந்ததில்லை.

இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அமைய வேண்டும் என்பதே அவரது உண்மையான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தெரியும்போது தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற வெளிப்படையான நிலையை எடுக்கும்போது அவர் பிடிவாதமாகவோ திடமாகவோ அம்முடிவை எடுக்கவில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். அவர் விடுதலை புலிகளின் அட்டூழியங்களை ஆதரிக்கவில்லை.

ஒருமுறை நான் அவரிடம் பேசும்போது, ஒரு முட்டாள்தனமான தவறு, குற்றத்தை விட மோசமானது என ஒருவரின் மேற்கோளை காட்டி ராஜிவ் காந்தி கொலை குறித்து சொல்லிக்கொண்டிருந்தேன். விடுதலை புலிகளின் முட்டாள்தனமான தவறுகள் குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

ஒன்று, இந்திய அமைதி காப்புப் படையுடன் விடுதலை புலிகள் வெறித்தனமாக போர் நடத்தியது. இரண்டு, ராஜீவ் காந்தி படுகொலையை கட்டாயமாக பிரபாகரனே திட்டமிட்டது. அது ஒரு மிகப்பெரிய குற்றம். மேலும் முட்டாள்தனமான தவறு என்றேன் என குறிப்பிட்டுள்ளார்.