தொடர்ந்து பாதிக்கப்படும் அந்தோனியார்புரம் கிராம மீனவர்கள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மாந்தை மேற்கு, அந்தோனியார்புரம் கிராம மக்கள் தொடர்ச்சியாக வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படுவதாகவும் தங்களிடம் உழைப்பு முயற்சி இருக்கின்ற போதும் அரச அதிகாரிகள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எம்மை கண்டு கொள்வதில்லை எனவும் அம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் வினவிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள்,

அப்பகுதி மக்களில் சுமார் 180இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடியை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு குறித்த கிராமத்தில் மீள் குடியேறியுள்ளனர். வறுமையின் காரணமாக பெண்களும் ஆபத்தான கடல் அட்டை, நண்டு இறால் போன்றவை பிடிக்கும் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும், அண்மைக் காலமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்படுகின்ற கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கடலுக்கு செல்லும் பிரதான படகு பாதையில் கடல் நீர் வற்றி காணப்படுகின்றது.

இதனால் படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாத நிலையில் நீர் இன்றி காணப்படுகின்றது.

இதனால் தாங்கள் தொடர்சியாக ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடலில் பிடிக்கும் மீன்களை கரைக்கு படகு மூலமாக கொண்டு வர முடியாமையினால் தொழிலில் கிடைக்கப்பெற்ற கடல் உணவுகளை சுமார் 3 கிலோ மீற்றருக்கு மேல் தோலில் சுமந்து கரையை அடைய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக பல முறை அரச அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும் வெகுவிரைவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த படகு பாதையை சீரமைத்து தருமாறும் குறித்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.