சுழற்சி முறையிலான போராட்டம் வியாழேந்திரனால் கைவிடப்பட்டது

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனால் மூன்றாவது தினமாக இன்று மேற்கொள்ளப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று மாலை கைவிடப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததையடுத்து போராட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

தேகியத்தன்கண்டி விகாரையில் இருந்து வருகை தந்த பிக்குகளினால் அனுஸாசனம் ஓதப்பட்டு வியாழேந்திரன் எம்.பிக்கு நீர் வழங்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தில் பெருமளவான பௌத்த பிக்குகள் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

மட்டக்களப்பில் மற்றுமொரு உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த மோகன் டிலோஜன் தமது போராட்டத்தை நிறைவு செய்துள்ளார்

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் மாணவர் அமைப்பின் தலைவர் மோகன் டிலோஜன் நேற்று மாலை சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் பதவி விலகியதை தொடர்ந்து தமது சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முடித்துக்கொள்வதாக டிலோஜன் அறிவித்திருந்தார்.

அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகன் ஆகியோர் நீர் வழங்கி போராட்டத்தினை நிறைவு செய்திருந்தனர்.