விவசாயப் பிரதிநிதிகள் கவனயீர்ப்பில்! ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் கைவிடும் நிலை

Report Print Kumar in சமூகம்

தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனைக்குட்பட்ட மொட்டையாகல், ஊறக்கை ஆகிய கண்டங்களின் விவசாயப் பிரதிநிதிகள் தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனைக்கு முன்னால் நீரினைப் பெற்றுக்கொடுக்க கோரி இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் நிலவிவரும் கடுமையான வரட்சி காரணமாக ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனைக்குட்பட்ட மொட்டையாகல், ஊறக்கை ஆகிய கண்டங்கங்களுக்குட்பட்ட 960 இற்கும் மேற்பட்ட வயல் நிலங்களே இதில் அதிகமான பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதிகமான பாதிப்புள்ளாகியுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் இன்று தம்பிலுவில் நீர்ப்பாசன திணைக்கள காரியாலயத்திற்கு முன்னால் நீரினைப் பெற்றுக்கொடுக்க கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு அமைதியான முறையில் தங்களது கோரிக்கையினை முன்வைத்தனர்.

விவசாய செய்கை ஆரம்ப கூட்டத்தின்போது தங்களுக்கான அனுமதியை பிரதேச செயலகத்தினூடாக வழங்கியதாகவும் தற்போது குடலைப்பருவத்தில் இறுதிக்கட்ட நீரினை வழங்காமல் நீர்ப்பாசன திணைக்களம் செயற்படுவதாகவும் இரு தடவைகள் மாத்திரம் நீரினை வழங்கினால் தமது வேளாண்மையை காப்பாற்ற முடியும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

குறித்த வயல் நிலங்களுக்கு நீரினை வழங்கிவரும் சாகாமக்குளத்தின் நீர் மட்டம் குறைந்தமையே நீரினை வழங்காமைக்கு பிரதான காரணம் என நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிடும் இச்சந்தர்ப்பத்தில் பன்னலகம மற்றும் அம்பலோயா, வம்மியடி குளங்களில் உள்ள நீரினை வழங்க முடியும் எனவும் அவ்வாறு இரு தடைவ மாத்திரம் வழங்கினால் தமது விவசாயச் செய்கையினை பாதுகாக்க முடியும் எனவும் ஆகவே இதற்கான நடவடிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பன்னலகம மற்றும் அம்பலோயா, வம்மியடி குளங்களில் உள்ள நீரினைப்பெறுவதால் அங்குள்ள விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும் விவசாயிகள் குறிப்பிட்டனர்.

அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர்களின் கவனத்திற்கு இவ்விடயம் தொடர்பில் அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு நீரினை வழங்க விருப்பம் உள்ளதாகவும் பன்னலகம மற்றும் அம்பலோயா குளத்தினை அண்மித்த விவசாயிகள் மற்றும் மக்களின் விருப்பின்மையினாலேயே இவ்வாறு நீரை வழங்காமல் தயக்கம் காட்டுவதாகவும் விவசாயிகள் கூறினர்.

இதேவேளை கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் மகஜர் ஒன்றினையும் தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனையில் ஒப்படைத்தனர்.