வவுனியா வடக்கு காணிப்பிணக்குகள் தொடர்பான கலந்துரையாடலுக்காக 41 பேருக்கு அழைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா வடக்கு காணிப்பிணக்குகள் தொடர்பான கலந்துரையாடலுக்காக 41 பேருக்கு கிராம அலுவலர் ஊடாக அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, வவுனியா வடக்கு பகுதியில் உள்ள காணி உரிமம் மற்றும் உரிமை, காணி ஆவணம், காணி எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்து வைக்கும் முகமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக கலந்துரையாடல் மற்றும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 41 பேருக்கு அழைப்பு கடிதங்கள் குறித்த பகுதி கிராம அலுவலர்களின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சன்னாசிபரந்தன், குறிசுட்டகுளம், புளியங்குளம் வடக்கு, நெடுங்கேணி, சின்னடம்பன், பட்டிக்குடியிருப்பு பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கான கடிதங்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கான காணி பிணக்கு தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 8ஆம் திகதி காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.

எனவே, சம்மந்தப்பட்டோர் வருகை தந்து கலந்துரையாடல் ஊடாக தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதுதவிர, காணிப்பிணக்குகள் தொடர்பாக வவுனியா வடக்கினைச் சேர்ந்தவர்கள் புதிதாக முறைப்பாடுகள் எதுவும் செய்ய வேண்டுமானால் அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.