பாடசாலை சமூகத்திற்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இடைவெளி தொடர்பில் கரிசனை

Report Print Theesan in சமூகம்

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இடைவெளிகள் குறித்தும் பாடசாலை சமூகத்திற்கிடையிலான இடைவெளிகள் குறித்தும் மனித உரிமை ஆணைக்குழு அவதானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் தாம் கரிசனை கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வன்னிப்பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

எமது மனித உரிமை ஆணைக்குழுவானது கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாடசாலைகளில் ஒரு சமூகத்தை சேர்ந்த பிள்ளைகள் ஒடுக்குதலுக்குட்படும் வாய்ப்புகள் இருக்கின்றது.

அவ்வாறான சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதையும் அறியக்கூடியதாக உள்ளது. அது மட்டுமல்லாது ஆசிரியர்கள், மாணவர்கள், அரச ஊழியர்கள் மத்தியிலும் இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளமை எமது அவதானத்திற்கு எட்டியுள்ளது.

இதன் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயமானது பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக பல வேலைத்திட்டங்களை நாம் அண்மையில் ஆரம்பித்துள்ளோம்.

குறிப்பாக பாடசாலை சமூகத்திற்குள்ளே பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் சந்தேகக்கண்ணோடு பார்க்கின்ற நிலைமையை போக்கும் வகையிலும் அவர்கள் மத்தியில் ஒரு சமாதானமான நல்லிணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கோடும் நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

முதற்கட்டமாக நாம் வவுனியா மாவட்டத்தில் இயங்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலை அதிபர்களை அழைத்து அவர்களிடமிருந்து பல்வேறுபட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியிருக்கின்றோம். அவர்களால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகள் எமது அவதானத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மாணவர்கள் மத்தியில் காணப்படும் இடைவெளிகள் முஸ்லிம் ஆசிரியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அவர்களது ஆடை தொடர்பில் உள்ள பிரச்சினைகளை இக் கலந்துரையாடலில் அவர்கள் முன் வைத்துள்ளனர்.

அந்தவகையில் பாடசாலை மத்தியில் இன நல்லுறவையும், சமாதான நிலைமையையும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை கொண்டு செல்ல இருக்கின்றோம்.

இதன் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழுவானது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நுணுக்கமாக ஆராய்ந்து கல்வி அமைச்சுக்கு சில சிபாரிசுகளை அனுப்பியுள்ளோம்.

சிவில் சமூகத்திடம் இருந்து பல கேள்விகள் எழும்புகின்றது. அதாவது அவசரகால சட்டம் மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பில் விரைவில் கலந்துரையாடலை நடத்தி அது தொடர்பில் பூரண விளக்கத்தினை பெற்றுத்தருமாறு கூறியுள்ளார்.

ஆகவே மிக விரைவாக அவசரகால சட்டம் தொடர்பான தெளிவூட்டலை சிவில் சமூகத்திற்கும் ஏனைய சமூகத்திற்கும் நாம் வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers