எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள ரமழான் வாழ்த்துச் செய்தி

Report Print Dias Dias in சமூகம்

புனித நோன்பினை நோற்ற இலங்கையின் முஸ்லிம்கள் அனைவருக்கும், அவர்களது பிள்ளைகள் உட்பட அனைத்து குடும்ப உறவினர்களுக்கும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுடன், சமாதானமும் மற்றும் மகிழ்ச்சியுமிக்க புனித நோன்புப் பெருநாளாக அமைய வேண்டுமென வாழ்த்தி பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ரமழான் வாழ்த்துச் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவ் வாழ்த்துச் செய்தியில்,

இலங்கையர்களான எமது முஸ்லிம் மக்கள் மே மாதம் 07ஆம் திகதி ஆரம்பித்த புனித ரமழான் மாதத்தின் நோன்பு நோற்கும் கிரியையானது ஷவ்வால் மாதம் தலை பிறை தென்பட்டவுடன் பூர்த்தியடைவதுடன், அன்றைய தினத்திலே அவர்கள் ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு வருடத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான தினமாக இப்புனித நோன்புப் பெருநாள் தினம் விளங்குகின்றது.

உண்மையான முஸ்லிம் ஒருவர் பொறுமை, மற்றவர்களுக்கு உதவி செய்தல், மற்றவர்களின் பசியினை உணர்வுபூர்வமாக நோக்குதல், பிறருக்கு நோவினை, நிந்தனை, இம்சைகள் என்பன செய்யாதிருத்தல், பிற மதங்களையும் இனத்தவர்களையும் மதித்தல் மற்றும் தமது தாய் நாட்டிற்கு அன்பு காட்டுத்தல் ஆகிய நற்பண்புகளை கடைபிடிப்பதற்கு பயிற்றுவிக்கப்படுகின்றார்.

பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களுடன் இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் சமயங்களைப் பின்பற்றும் மக்கள் வாழுகின்ற எமது நாட்டிலே சமாதானம், ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றிற்கும் மேற்கூறிய சமய வழிகாட்டல்களின் மூலம் மகத்தான பக்கபலமொன்று கிடைக்கப் பெறுகின்றது.

புராதன அரச காலந்தொட்டு முஸ்லிம் மக்கள் நாட்டின் ஏனைய இனத்தவர்களுடன் மிகவும் நட்புறவுடனும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் மற்றும் நம்பிக்கையுடனும் செயற்பட்டவர்கள் என்பதனை நாம் நன்கறிவோம்.

அதற்கு காரணம் அவர்கள் அன்று தேசியத்துவத்திற்கு மதிப்பளித்து செயற்பட்டமையாகும். இனவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றினை இஸ்லாம் சமயமும் வெறுக்கின்றது என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

அந்த அடிப்படையில் தற்போது எழுந்துள்ள தேசிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுப்பது தற்போதைய ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.

30 நாட்கள் இறையச்சமிக்க முறையில் நோன்பு நோற்றதன் பின்னர் புனித நோன்புப் பெருநாளை சிறப்பாக கொண்டாடி வரும் இச்சந்தர்ப்பத்தில் நான் அனைத்து முஸ்லிம் மக்களிடமும் வேண்டிக் கொள்வது, புனித அல்குர்ஆனின் போதனைகள் மற்றும் உத்தம நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்)இன் நற்குணங்கள் மற்றும் வழிகாட்டல்கள் என்பவற்றினை எப்போதும் நினைவில் கொண்டு அநாதி காலந்தொட்டு கடைபிடித்து வந்த சகவாழ்வுக் கொள்கைக்காக மென்மேலும் அர்ப்பணித்து செயற்பட வேண்டும் என்பதாகும்.

புனித நோன்பினை நோற்ற இலங்கையின் முஸ்லிம்கள் அனைவருக்கும், அவர்களது பிள்ளைகள் உட்பட அனைத்து குடும்ப உறவினர்களுக்கும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுடன் சமாதானமும் மற்றும் மகிழ்ச்சியுமிக்க புனித நோன்புப் பெருநாளாக அமைய வேண்டுமென வாழ்த்தி பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Latest Offers