அமைச்சர் ரிசாட் பதவி துறந்தமையால் பொங்கல் பொங்கி வழிபட்ட இளைஞர்கள்

Report Print Theesan in சமூகம்

அமைச்சர் ரிசாட் பதியுதீன் அமைச்சர் பதவியை துறந்தமையை கொண்டாடும் முகமாக செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னர் மத்திய அரசில் பங்கேற்றுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட மேல் மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் பதவி விலக வேண்டுமென தெரிவித்து நாட்டில் பல போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பதவி விலகியதை அவரால் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமமான சாளம்பைக்குளத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தமிழ் கிராமமான செக்கடிப்புலவு கிராமத்து இளைஞர்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக பம்பைமடு சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், வீதியால் சென்றவர்களுக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இளைஞர்கள்,

கடந்த காலங்களில் அமைச்சரினால் நாம் ஓரங்கட்டப்பட்டிருந்தோம். எமது கிராமங்கள் பூர்வீக கிராமங்களாக இருந்தபோதிலும் எமது கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் புதிதாக அமைக்கப்பட்ட சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்து அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.

எமது கிராமத்தவர்கள் ஒதுக்கப்பட்ட நிலை காணப்பட்டது. இதன் காரணமாக அவரது அமைச்சு பதவி துறந்ததையும் இனிவரும் காலங்களில் எமது தமிழ் கிராமங்களுக்கு விமோசனம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers