முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பெருநாளாக நோன்புப் பெருநாள் அமைய வேண்டும்

Report Print Mubarak in சமூகம்

முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒருவகையான அச்சத்தில் மூழ்கி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் மலர்ந்திருக்கும் புனித நோன்புப் பெருநாள் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் முழுமையான பாதுகாப்பையும் நிம்மதியையும் கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில்,

ஏப்ரல் 21ஆம் திகதி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களின் சொத்துக்கள் எரிக்கப்பட்டு உயிர்கள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நாட்டை நேசிக்கும் இந்த நாட்டுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாத முஸ்லிம்கள் இந்த அசாதாரண சூழலை விரும்பவில்லை. ஏனைய இன மக்களுடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றனர்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து வாழுகின்ற முஸ்லிம்கள் வரலாற்று நெடுகேயும் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணியே வருகின்றனர்.

இருந்தாலும், அரசியல் இலாபம் தேடும் சில தீய சக்திகள் இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை பலி கொடுத்து தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நாம் அரசியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். சில விடயங்களில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம்.

இருந்தாலும், முஸ்லிம்கள் மனதில் ஒருவகையான அச்சம் குடிகொண்டிருப்பதை மறுக்க முடியாது.

குண்டு வெடிப்புடன் எந்த வகையிலும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்கள் இவ்வாறு துன்பங்களை அனுபவிப்பதும் சிறைகளில் வாடுவதும் முடிவுக்கு வரவேண்டும்.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக போராடும் எம்போன்ற அரசியல் தலைவர்களின் போராட்டத்துக்கு அல்லாஹ் வெற்றியைத் தர வேண்டும் என்றும் அனைத்து முஸ்லிம்களின் வாழ்விலும் நிலையான சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம் - ரிஷாட் பதியுதீன்

ஐக்கியம், சமாதானத்தில் முஸ்லிம்களுக்குள் விருப்பத்தை, ஏனைய சமூகத்தினர் புரிந்து கொள்ளும் சுமுக நிலை உருவாகப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எவரும் எதிர்பாராது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடிகளுக்குள்ளாகி உள்ளது.

ஒரு சிலரின் கொடிய கோட்பாடுகளை.இஸ்லாத்துடன் இணைக்கும் சில மத நிந்தனையாளர்களின் போக்குகளும் முஸ்லிம்களை வேதனைப்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers