வவுனியா கணேசபுரம், சமயபுரம் மக்கள் வீட்டுத்திட்டம் கோரி போராட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - கணேசபுரம், சமயபுரம் கிராமத்திலுள்ள மக்கள் ஒன்றிணைந்து, தமக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.

குறித்த போராட்டம் 20ற்கும் மேற்பட்ட குடும்பங்களால் இன்று காலை வவுனியா மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரபையின் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக வீட்டுத்திட்டம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு தமக்கான வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. பிரதேச செயலாளர் சிபாரிசு வழங்கினாலும் மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் நிராகரித்துள்ளதாகவும் கடந்த இரண்டு வருடகாலமாக வீட்டுத்திட்டம் வழங்குவதாக தெரிவித்து தம்மை சிரமத்திற்குள்ளாக்குவதாகவும் தமக்கான பெயர் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளடக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து அகதியாகச் சென்று மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மீண்டும் அகதியாகவே வாழ்ந்து வருகின்றனர். தமக்கான வீட்டுத்திட்டம் வழங்க எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எமது கிராமத்திற்கு நேற்று சிலருக்கு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. தமக்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் அடிப்படை வசதியற்ற வீட்டில் வசித்து வருவதாகவும் கூறி, தற்போது குடியிருக்கும் வீட்டில் புகைப்படங்களைத் தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அவ்விடத்திற்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமான கே.காதர் மஸ்தான் போராட்டம் மேற்கொள்வதற்கான காரணத்தைக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரபையின் மாவட்ட முகாமையாளர் முருகனூர் கிராமத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதால் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணேசபுரம், சமயபுரம் கிராமப்பகுதி மக்களின் வீட்டுத்திட்டம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

அப்பகுதி மக்களின் போராட்டம் குறித்தும் நிலைமைகளை எடுத்துக்கூறி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளரிடம் கட்சி பேதம் இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்தினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் இருப்பதாகத் தெரிவித்து மாவட்ட திட்டப்பணிப்பாளரை போராட்ட இடத்திற்கு அரசாங்க அதிபர் அனுப்பிவைத்துள்ளார். மாவட்ட திட்டப்பணிப்பாளர், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தரை மக்களின் போராட்ட இடத்திற்கு அழைத்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மற்றும் வீட்டுத்திட்டத்தில் பெயர் விடுபட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டத்தினை கேட்டறிந்து நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்து வீட்டுத்திட்டங்களை வழங்க இன்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானின் வாக்குறுதியையடுத்து போராட்டம் மேற்கொண்டவர்கள் ஒருமணித்தியாலயம் மேற்கொண்ட தமது போராட்டத்தினைக் கைவிட்டு அவ்விடத்திலிருந்து சென்றுள்ளனர்.

இதேவேளை நேற்று சமயபுரம் கிராமத்திலுள்ள ஒரு பகுதிக்கு வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே அப்பகுதியிலுள்ள விடுபட்ட மக்கள் தமக்கான வீட்டுத்திட்டம் வழங்கவேண்டும் என்று கோரி இன்றைய தினம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers