மடு மாதா ஆலயத் திருவிழா தொடர்பில் கலந்துரையாடல்! பாதுகாப்பு குறித்து முக்கிய தீர்மானம்

Report Print Ashik in சமூகம்

மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து மக்களும், பக்தர்களும் பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கும் உட்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் இன்று மாலை 3.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உட்பட அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்களாக 15 திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மேலும் குடி நீர், போக்குவரத்து, சுகாதாரம், வைத்திய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி நடாத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வழமை போல் இவ் வருடமும் ஆடி மாத திருவிழா நடாத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். இன்றைய தினம் குறித்த மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கூடி முடிவுகள் மேற்கொண்டுள்ளோம்.

குறிப்பாக மடு திருத்தலத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.

மக்கள் வந்து மருதமடு அன்னையின் பரிந்துரையினை பெற்றுக்கொண்டு ஆசீர்வாதத்தின் வழியாக அவர்களின் வாழ்க்கை சிறப்புப் பெற வேண்டும்.

பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு சோதனைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் மக்களும், பக்தர்களும் தயாராக வர வேண்டும்.

உங்களையும், உங்கள் உடமைகளையும் சோதனை செய்து தான் ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். அதனை மனதில் வைத்து ஆடி மாத திருவிழாவிற்கு வர முடியும். நாங்கள் உங்களை வரவேற்கின்றோம் என ஆயர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers