நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமானம் உறுதிப்படுத்தப்படும்

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை நீராவியடிப்பிள்ளையார் கோவிலுக்கு பண்டைய வரலாறு இருக்கும் என்று உறுதிப்படுத்தப்படுமானால் எனது அமைச்சே நேரடியாக இந்த வழக்கில் ஒரு தரப்பாக மாறி எங்கள் நியாயத்தினை, நாங்கள் நீதிமன்றத்திற்கு தெரிவிப்போம் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக ஆலயத்தின் கட்டுமானப்பணியும் இருப்பும் உறுதிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அமைச்சர் மனோ கணேசன் நேற்று பயணம் மேற்கொண்டு மத ஸ்தலங்கள் தொடர்பிலான பிரச்சினைகளை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

ஏற்கனவே அறிவித்ததன் படி, திருகோணமலை மாவட்ட கன்னியா விநாயகர் ஆலய பிரச்சினை தொடர்பிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய பிரச்சினை தொடர்பிலும் நேரடியாக பார்வையிட்டு மாவட்ட செயலகங்களில் கலந்துரையாடலை நடத்தி தீர்வு காணும் நோக்கில் எனது பயணம் அமைந்துள்ளது.

கன்னியா ஆலயம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை நடத்தினோம். மாவட்ட செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அதன்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு சென்று நிலைமைகளை நேரடியாக அவதானித்துள்ளேன்.

அதன்படி உடைக்கப்பட்ட விநாயகர் ஆலய ஸ்தலத்தில் பௌத்த விகாரைகள் எதுவும் கட்டப்படமாட்டாது என்பதும் அந்த இடத்தில் புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத வகையில் வெந்நீரூற்று விநாயகர் ஆலயம் மீண்டும் கட்டப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிவன் ஆலயமும் புனரமைக்கப்படும் இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூகமேம்பாடு,இந்துசமய அலுவல்கள் அமைச்சு ஒதுக்கி தரும் என்பதை உறுதிப்படுத்தி கூறியுள்ளேன்.

அது மட்டுமல்ல இந்த பகுதிகளில் பண்டைய காலத்தில் தமிழ், பௌத்தம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் சொல்லப்பட்ட தமிழ், பௌத்தம் இரண்டாம் நூற்றாண்ட்டு தொடக்கம் ஏழாம் நூற்றாண்டு பகுதிகளில் இருந்திருக்கின்றது என்பதையும் பௌத்தம் என்றால் சிங்கள பௌத்தம் மட்டும் என்பதை நாங்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டுள்ளதாக அங்கு வந்த தேரர்கள் நேரடியாக கூறியுள்ளார்கள்.

பௌத்தம் என்றால் சிங்களம் மட்டுமல்ல தமிழர்களுக்கும் அதில் உரிமை இருக்கின்றது என்பதை நாங்கள் கூறி இருக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் எங்கேயாவது பௌத்த புராதான சிதைவுகள் கிடைக்குமானால் அது சிங்கள பௌத்தம் அல்ல. அது தமிழ் பௌத்தமாக இருக்கமுடியும் என்ற கருத்தினை கூறியுள்ளோம். அந்த அடிப்படையில் கன்னியா பிரச்சினைக்கு ஒரு தீர்வை காணப்படும் என்று நினைக்கின்றேன்.

அந்த ஆலய அறங்காவலர்களுக்கு ஆலய கட்டுமானத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அது தொடர்பான மதிப்பீடு தருமாறு கோரியுள்ளேன்.

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளேன். பௌத்த விகாரைக்கும் சென்று பார்வையிட்டு மாவட்ட செயலகத்தில் இரு தரப்பினருடன் மாவட்ட செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், சி.சிறீதரன் ஆகியோரும் வருகை தந்திருந்தார்கள். என்னுடன் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் வந்திருந்தார்.

இந்த கூட்டத்தின் போது இறுதியாக நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம். இந்த நிலையில் இருந்து எந்தவித கட்டுமான பணிகளும் விகாரை தரப்பினரால் செய்யப்பட முடியாது என்று தீர்மானித்துள்ளோம். அதுதான் நீதிமன்ற தீர்ப்பாக இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

செய்யப்பட வேண்டும் என்றால் பிரதேச சபையினதும், பிரதேச செயலகத்தினதும் உடன்பாட்டு அனுமதியினை எழுத்துமூலம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

அந்த அடிப்படையில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும்படி எனது பணிப்புரையில் இங்கு வந்திருக்கக்கூடிய மாகாணத்தினை சார்ந்த பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் அதேபோல பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன்.

இந்து கோவிலை பொறுத்தமட்டில் கட்டுமானப்பணிகள் செய்வதானால் பிரதேச சபை இருக்கின்றது. பிரதேச செயலகம் இருக்கின்றது. அவற்றில் சென்று அனுமதியினை பெறுங்கள். அவற்றை பெற்றுக்கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ளுங்கள் அப்படி செய்வீர்களேயானால் அவர்களுக்கு இடையூறு ஏற்பாடாமல் பாதுகாக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இன்றுதான் நீராவியடிப்பிள்ளையார் ஆலய உரிமை தொடர்பாக எழுத்துமூலம் கோவை ஒன்று ஆலய அறங்காவலர்கள் எனக்கு தந்துள்ளார்கள்.

உடனடியாக நான் சென்று ஆராய்ந்து பார்ப்பேன் நீராவியடிப்பிள்ளையார் கோவிலுக்கு பண்டைய வரலாறு இருக்கும் என்று உறுதிப்படுத்தப்படுமானால் எனது அமைச்சே நேரடியாக இந்த வழக்கில் ஒரு தரப்பாக மாறி எங்கள் நியாயத்தினை நாங்கள் நீதிமன்றத்திற்கு தெரிவிப்போம். இதன் ஊடாக ஆலயத்தின் கட்டுமானப்பணியும் இருப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் தொகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள்தான் பெரும் துன்பத்தை சந்தித்த மக்கள் என்று நன்றாக தெரியும்.

தெளிவாக சென்னேன். தேரரிற்கும் விளக்கமாக சொன்னேன். பொலிஸ் அதிகாரிகளுக்கும் சொன்னேன். போரால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மக்களை அக்கறையுடன் கவனியுங்கள்.

அவர்களுக்கு தாங்கள் இலங்கையர்கள் என்ற உணர்வினை படிப்படியாக ஊட்டுங்கள். அவர்களை மீண்டும் வன்முறைக்கு தூண்டாமல் அல்லது நெருக்கடிக்கு தள்ளுவதற்கோ முயற்சிக்க வேண்டாம். முயற்சித்தால் அது படுபாதக செயல் என்பதை சிங்கள மொழியில் தெளிவாக கூறியுள்ளேன் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.