தமிழ்நாட்டின் தௌஹீத் அமைப்பினால் இலங்கைக்கு பாரிய ஆபத்து! தற்கொலைதாரிகள் குறித்து வெளிவரும் தகவல்கள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையில் தீவிரவாத குழுக்கள் உருவாவதற்கு தமிழ் நாட்டை சேர்ந்த தீவிரவாத போதகர்களின் செல்வாக்கு முக்கிய காரணம்.தமிழ் நாட்டை சேர்ந்த தௌஹீத் ஜமாத்தின் நடவடிக்கைகள் இலங்கைக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என சிங்கப்பூர் பல்கலைகழகத்தின் பாதுகாப்பு விவகாரங்களிற்கான பேராசிரியர் ரொஹான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

இலங்கையிலிருந்து சிரியாவிற்கும் ஈரானிற்கும் சென்று ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து கொண்ட முதல் இலங்கை பிரஜை முகமட் நிலாம். அவர் 2015 இல் கொல்லப்பட்டார், இவர் கண்டி திரித்துவ கல்லூரியின் பழைய மாணவர்.

அவர் ஆறு மாதங்கள் மத்ரசாவில் கல்வி பயின்றார், ஆனால் பல்கலைக்கழக கல்வியை விரும்பி பாக்கிஸ்தானில் உள்ள சர்வதேச இஸ்லாமிய கல்லூரியில் இணைந்து பட்டம்பெற்றார்.

இலங்கையில் தீவிரவாத குழுக்கள் உருவாவதற்கு தமிழ் நாட்டை சேர்ந்த தீவிரவாத போதகர்களின் செல்வாக்கு முக்கிய காரணம்.

தமிழ் நாட்டை சேர்ந்த தௌஹீத் ஜமாத்தின் நடவடிக்கைகள் இலங்கைக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஐ.எஸ் அமைப்பு ஆசியாவில் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதால் அரச தலைவர்களும் மத தலைவர்களும் மாதத்திற்கு ஒருமுறையாவது சந்தித்து நிலவரம் குறித்து ஆராயவேண்டும்.

ஐ.எஸ் அமைப்பின் கொள்கை பரவுவதன் காரணமாக எங்கள் தேசங்கள் அடுத்த ஐந்து வருடங்களில அழிக்கப்பட்டுவிடும்.

முஸ்லிம்கள் எங்கள் பிராந்தியத்தில் பின்பற்றி வருகின்ற பாராம்பரிய இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு வெளிநாட்டு கொள்கைகளால் ஆபத்து என்பதை ஆராய்ச்சிகள் புலப்படுத்தியுள்ளன.

இலங்கையின் ஐ.எஸ் அமைப்பிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பில்லை இவர்களிற்கு இந்தியாவுடனும் மத்திய கிழக்குடனும் தொடர்புகள் உள்ளன.

நிதி திரட்டுவது மற்றும் பயிற்சிகள் இலங்கையிலேயே இடம்பெற்றன.

வனாத்தவில்லு, நுவரெலியா, அம்பாந்தோட்டை உட்பட பல பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பினர் முகாம்களை உருவாக்கினர்.

குண்டு தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை இவர்கள் இணையங்கள் மூலம் பெற்றனர். குண்டுகளை தயாரித்தவர் முகமட் ஹஸ்தூன். மிகத்திறமையான இளைஞரான இவரை சஹ்ரான் தீவிரவாதமயப்படுத்தி தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

இவரின் மனைவி புலஸ்தினி, இந்துப்பெண்மணியான இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.

தென்னாசியாவிற்கான ஐ.எஸ் அமைப்பின் கிளையான ஐ.எஸ் கொராசன் 2015 இல் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு அதன் பின்னர் இலங்கை உட்பட நான்கு நாடுகளில் தனது கிளையை ஏற்படுத்தியது.

ஐ.எஸ் அமைப்பு பிராந்தியங்களில் தனது கிளையை ஏற்படுத்த விரும்புகின்றது. இந்த கிளைகள் பிராந்திய நாடுகளிற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தப்போகின்றன.

பிராந்திய அரசாங்கங்கள் ஐ.எஸ் அமைப்பினை சிறிதளவும் அனுமதிப்பதில்லை என்ற கொள்கையை உருவாக்குவதுடன் அந்த அமைப்பினால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்காக கூட்டாக செயற்படவேண்டும்.

இலங்கையின் அமைப்பு இந்த கிளைகளுடன் சைபர் தொடர்புகளை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.